ராஜஸ்தான் முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயணம்: அமித்ஷா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்
ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் தேர்தல் சுற்றுப்பயணத்தை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தனது தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது இந்த சுற்றுப்பயணத்திற்கு ராஜஸ்தான் கவுரவ் யாத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த 58 நாள் சுற்றுப்பயணமானது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மக்களிடம் வாக்கு சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ராஜஸ்தானின் ராஜ்சம்மந்த் மாவட்டத்தில் சர்புஜநாத் கோவிலிலிருந்து தொடங்கும் இந்த பயணத்தை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சுற்றுப் பயணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பேருந்தில் முதல்வர் வசுந்தரா ராஜே அமர்வதற்கு முன் அமித்ஷாவும் முதல்வரும் சர்புஜநாத் கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.
சுற்றுப் பயணத்தின் முதல் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர்கள் மாவட்டத்தின் காங்ரோலி நகரத்தில் அருகில் அமைப்பட்டிருந்த ஹெலிபேடிற்கு இருவரும் வந்தனர்.
சுற்றுப் பயணத்தின்போது ராஜே 40 நாட்கள் செலவிட்டு பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வார். மீதியுள்ள 18 நாட்களும் சுற்றுப் பயணத்தின்போது ஓய்வெடுத்துக்கொள்வார்.
ராஜஸ்தானின் இந்த ‘ராஜஸ்தான் கவுரவ் யாத்ரா’ மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 165 தொகுதிகளில் பயணம் மேற்கொள்ளப்படும். பயணத்தின் உச்சகட்டமாக செப்டம்பர் 30ல் அஜ்மீரை சென்றடையும்.