பழமைக்கும் நவீனத்திற்கும் ஏற்றது யோகா: யோகா தின விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
சர்வதேச யோகா தினத்தையொட்டி டேராடூனில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பழமைக்கும் மட்டுமின்றி நவீனத்திற்கும் ஏற்றதாக யோகா இருப்பதாக கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவிப்பின்படி கொண்டாடப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாகவே இந்தியாவில் சர்வதேச யோகா தினம் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. 2015-ம் ஆண்டு டெல்லி ராஜபாதையில் சர்வதேச யோகா தினத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 35,985 பேர் கலந்து கொண்டனர். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. டெல்லி மற்றுமின்றி பல்வேறு நகரங்களிலும் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்தநிலையில் சர்வதேச யோகா தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று காலை பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதற்காக சுமார் 1250 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் இடம் தயார் செய்யப்பட்டு இருந்தது. யோகாசன நிகழ்ச்சியில் பல்வேறு விதமான ஆசனங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பின.
முன்னதாக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் ‘‘அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
யோகா மூலம் புதிய அனுபவம் கிடைக்கிறது. யோகா செய்வதால் உடல், மனம், ஆன்மாவை அமைதிப்படுத்தலாம். யோகாவால் மன அமைதி கிடைக்கும்; எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். மனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா.
கங்கை நதி பாயும் இடத்தில் யோகா செய்வது பெரும் பாக்கியம். இன்று சூரியன் உதிக்கும் இடமெல்லாம் யோகா நடைபெறுகிறது. இதற்காக இந்தியா பெருமை கொள்கிறது. பழங்காலத்தில் மட்டுமின்றி நவீன காலத்திலும் யோகா அழகாதாக இருக்கிறது’’ எனக் கூறினார்.