EBM News Tamil
Leading News Portal in Tamil

காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளில் சிலவற்றை மாற்ற வேண்டும்: பிரதமரிடம் கர்நாடக முதல்வர் குமாரசாமி வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளில் சிலவற்றை மாற்ற வேண்டும் என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, கடந்த ஜூன் 1-ம் தேதி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. மேலும், அதற்கான ஆணையை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தற்காலிகத் தலைவர், தலைவர், உறுப்பினர்களின் நியமனம் ஆகியவற்றையும் அறிவித்தது. எனவே தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களின் பிரதிநிதிகளின் பெயர்களை மத்திய அரசிடம் வழங்கினர்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்த கர்நாடக அரசு, தங்கள் மாநில பிரதிநிதிகளின் பெயர்களை இன்னும் வழங்கவில்லை. கடந்த 12-ம் தேதிக்குள் பிரதிநிதிகளின் பெயர்களை வழங்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கெடு அளித்தும், இதுவரை கர்நாடகா தங்கள் மாநில பிரதிநிதிகளின் பெயர்களை வழங்கவில்லை.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பேசினார். கர்நாடகாவின் கோரிக்கையை வலியுறுத்தும் மனுவை பிரதமர் மோடிக்கும், நிதின் கட்கரிக்கும் வழங்கினார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பல விதிமுறைகள் தங்களது மாநிலத்துக்கு எதிராக இருக்கிறது என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சட்டம் 1956-ன்படி, இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற வேண்டியது அவசியம். காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பானது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே, மத்திய அரசு தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளது. இது மாநில உரிமையை பறிக்கும் செயலாகும்.
இருப்பினும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த ஆணையத்துக்கு எங்கள் மாநில பிரதிநிதிகளின் பெயரை விரைவில் அனுப்பு வோம்.
தற்போதுள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளை ஏற்பதில் எங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதுகுறித்து மேல்முறையீடு செய்வதா? மாற்றி அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவதா என சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை ஆணையம் 10 நாட்களுக்கு ஒருமுறை காவிரியின் குறுக்கேயுள்ள‌ அணைகளின் நீர் இருப்பை கணக்கிடும். அப்போதைய நீர் இருப்பின்படியே, மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கிடப்படும் என கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. அதேபோல், காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் உள்ள விவசாயிகள் என்ன மாதிரியான பயிர்களை பயிரிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் தீர்மானிக்கும் என்பதையும் ஏற்க முடியாது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேலும் சில விதிமுறைகள் நடைமுறையில் சாத்தியப்படாது. எனவே, அவற்றை மாற்றியமைக்குமாறு பிரதமர் மோடியிடமும், நிதின் கட்கரியிடமும் வலியுறுத்தியுள்ளேன். அதற்கு, சம்பந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளுடன் பேசி முடிவெடுப்பதாக பிரதமர் கூறினார். கர்நாடகாவுக்கு அநீதி ஏற்படுவதை தடுப்பதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.