EBM News Tamil
Leading News Portal in Tamil

‘அவுரங்கசீப்புக்கு தலைவணங்குகிறோம்: நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் இருக்கிறாரா?’- நிர்மலா சீதாராமனை விளாசிய சிவசேனா

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வன்முறைகள் நடக்கின்றது, நமது படை வீரர்களும் தீவிரவாதிகளால் சுடப்பட்டுவருகிறார்கள், உண்மையில் நமது நாட்டுக்குப் பாதுகாப்பு அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா என்று சிவசேனா கட்சி விளாசியுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா கட்சி, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு தீவிரவாதிகளுக்கு எதிராகச் செயல்படும் விஷயத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று கடுமையாகச் சாடியுள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நம்முடைய நாட்டின் முப்படைகளின் தலைவர்களும் எந்தவிதமான சூழலையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம், அதற்கான வலிமை நம்மிடம் இருக்கிறது என்று ஏற்கனவே கூறி இருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருப்பவர் திறமையற்றவராக இருக்கிறார். பலவீனமாக, செயல்திறனற்றவராக, ஆளுமைத் திறனற்றவராக, எதையும் தீர்மானமாக எடுக்கமுடியாதவராக இருக்கிறார்.
சோபியான் பகுதியில் பாதுகாப்பில் இருந்த நம்முடைய படைவீரர் அவுரங்கசீப் முகம்மது ஹனீப் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு புனித ரமலான் மாதத்தில் தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்.
நாங்கள் எப்போதும் முகாலய மன்னர் அவுரங்கசீப்பை விமர்சனம் செய்வோம். ஆனால், நம்முடைய படைவீரர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அவுரங்கசீப் வீரமரணம் அடைந்திருக்கிறார்.
நம்முடைய வீரர் அவுரங்கசீப்பின் வீரம், தியாகம் நாட்டுக்கே ஒரு உத்வேகத்தை நீண்டகாலத்துக்கு அளிக்கும். வீரமரணம் அடைந்த இந்த வீரனை மத்திய அரசு கண்டிப்பாக கவுரப்படுத்த வேண்டும்.
புனித ரமலான் மாதத்தில் அவுரங்கசீப் வீரமரணம் அடைந்து தனது உயிரை நாட்டுக்காகத் தியாகம் செய்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் இஸ்லாம் பெயரில் வன்முறை நடக்கிறது.இந்த அவுரங்கசீப் மட்டுமல்ல, இன்னும் ஏராளமான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வீரர்கள் நாட்டுக்காக வீரமரணம் அடைந்துள்ளனர்.
அவுரங்கசீப்பின் பெயரைக் கூறி ஜம்மு காஷ்மீரிலும், மஹாராஷ்டிராவிலும் மக்களிடம் வாக்குகளைப் பெற்றவர் இப்போது, நமது படைவீரர், அவுரங்கசீப்பின் வீரமரணத்தைக் கண்டு, தலைகுனிந்து நிற்கிறார்கள். நம்முடைய வீரர் அவுரங்கசீப்புக்கு நாங்கள் தலைவணங்கி நமாஸ் செய்கிறோம்.
வீரமரணம் அடைந்த அவுரங்கசீப்பின் கல்லறையில் மலர்களையும், கண்ணீரையும் நாங்கள் அர்ப்பணிக்கிறோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திலும் இதுபோன்ற அவுரங்கசீப் கண்டிப்பாக பிறக்க வேண்டும். அவுரங்கசீப்பின் வீரமரணம் என்றும் அழிவில்லாதது
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.