ஷில்லாங் நகரில் வன்முறை: ஊரடங்கு உத்தரவு அமல்
மேகலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கின் மாட்ரான் பகுதிகளில் ஒரு கட்டுக்கடங்காத கும்பலுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற வன்முறை மோதல்களினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் துணை ஆணையர் பீட்டர் எஸ்.ட்கார் கூறியதாவது:
ஷில்லாங் நகரத்தில் மாத்ரான், மாக்கர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வியாழன் இரவு ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. இதனால் லும்டிங்ஜிரி காவல் நிலையம் மற்றும் கண்டோன்ட்மெண்ட் பீட் ஹவுஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு (144) சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறைக் கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் வாயுவை பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறவில்லை.
தேம் ஆவ் மாவ்லாங் (ஹரிஜன்ஸ் லேன்) பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் பேருந்து நடத்துனரை தாக்கியதை அடுத்து மோதல் வெடித்துள்ளது. எனினும், ஒரு கும்பல் தேம் மாவ்லாங் பகுதியை நோக்கி கட்டுக்கடங்காமல் சென்றபோது சூழ்நிலை மாறியது. சாதாரண மோதல் வன்முறை கலவரமாக வெடித்தது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது அக்கும்பல் சரமாரியாக கற்களை வீசத் தொடங்கியது.
இந்த மோதலில் ஒரு பத்திரிகையாளரும் மற்றும் பொதுமக்களில் நால்வரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டேவீஸ் மாரக் கூறுகையில், ‘‘வன்முறை கும்பலால் மோப்ரான், உமோஷோன், ரின்ஜா, மற்றும் நொங்மின்சாங் பகுதிகளில் நான்கு வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதை அடுத்து நாங்கள் (காவல்துறை) மொத்த நகரத்திற்கும் பாதுகாப்புப் பணியை மேலும் கடுமையாக்கினோம்.
இக்கலவரத்தில் கல்லெறிந்தவர்களில் மூவரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து பெட்ரோல் குண்டுகளையும், மற்ற கூர்மையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளோம்’’ என்றார்.