EBM News Tamil
Leading News Portal in Tamil

டிரம்ப் – கிம் ஜோங் உன் நாளை சந்திப்பு

சிங்கப்பூர்: 60 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம்-ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் நாளை சந்தித்துப் பேச உள்ளனர். 2011ம் ஆண்டு வடகொரிய தலைவராக பதவியேற்ற பின், சீனா தவிர்த்து முதன்முறையாக அவர் வெளிநாடு வந்துள்ளார். அவரைச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார். வந்த உடனேயே கிம்-ஜோங்-உன், சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங்கைச் சந்தித்துப் பேசினார்.
கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூரின் பயா லேபர் ராணுவ விமான நிலையத்தில் நேற்று இரவு வந்திறங்கினார். அவருடன் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன், வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆகியோரும் வந்தனர்.
1950 – 53 காலகட்டத்தில் நிகழ்ந்த கொரிய போருக்குப் பின், எதிரிகளாக இருந்து வரும் வடகொரியா – அமெரிக்கா அதிபர்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பேச்சு நடத்தியது இல்லை. பல கட்ட நடவடிக்கைகளுக்குப் பின் வடகொரிய தலைவருடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை பேச்சு நடத்த உள்ளார். கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவச் செய்தல், அணு ஆயுத ஒழிப்பு ஆகியவை இந்தப் பேச்சின் முக்கிய அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் பேச்சுவாத்தையின் மூலம் வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்புக்கு முன் சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிரம்ப் – கிம் சந்திப்புக்காக சுமார் நூறு கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்தச் செலவைச் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.