EBM News Tamil
Leading News Portal in Tamil

பெயர் குழப்பம்… நடிகர் அமீர் கானை கொலைக்குற்றவாளி ஆக்கிய பாகிஸ்தான் டிவி…!

அமீர் கான் என்ற கொலைக்குற்றவாளியின் புகைப்படத்திற்கு பதிலாக பாலிவுட் நடிகர் அமீர் கானின் புகைப்படம் பாகிஸ்தானின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகியுள்ளது.

பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் கொலை வழக்கில் எம்.க்யூ.எம் தலைவர் அமீர் கான் குற்றவாளி என்ற செய்தியில், உண்மையான அமீர் கானுக்குப் பதிலாக இந்திய நடிகர் அமீர் கானின் புகைப்படம் ஒளிபரப்பாகியுள்ளது.

சில நிமிடங்களில் இந்த தவறு சரி செய்யப்பட்டாலும், ஒளிபரப்பான காட்சியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அமீர் கானின் ரசிகர்களால், அந்த தொலைக்காட்சி விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் நைலா இனாயத் இது தொடர்பாக ட்வீட் செய்த பின்னர், பாகிஸ்தானைக் கடந்து இந்த விவகாரம் வெளியே வந்தது. எனினும், இது தொடர்பாக டிவி சேனல் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

ஊரடங்கு காரணமாக நடிகர் ஆமீர் கான் தற்போது வீட்டில் இருகிறார். நிலைமை சீரானதும் லால் சிங் சாதா படத்திற்காக அவர் தயாராவார் என்று கூறப்படுகிறது.