EBM News Tamil
Leading News Portal in Tamil

விஜய் ஆண்டனியின் ஆக்‌ஷன் அவதாரம்: விஜய் மில்டனின் ‘மழை பிடிக்காத மனிதன்’ டீசர் எப்படி? | Vijay antony starrer Mazhai Pidikadha Manidhan movie teaser released


சென்னை: விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘கோலி சோடா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஜய் மில்டன். கடைசியாக 2018-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் ‘கோலி சோடா 2’ திரைப்படம் வெளியானது. அதன்பிறகு இவர் தமிழில் படம் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அச்சு ராஜாமணி – விஜய் ஆண்டனி இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? – “சில உயிர்கள் அற்பமானவை எனும் எண்ணமே உலகின் அனைத்து தீமைகளுக்கும் காரணம்” என டீசரின் தொடக்கத்தில் வரும் வசனம் கவனம் ஈர்க்கிறது. விஜய் ஆண்டனியின் ஆக்‌ஷன் அவதராமும், சத்யராஜின் வித்தியாசமான தோற்றமும், காட்சிகளுக்கு ஏற்ற ஈர்க்கும் பின்னணி இசை டீசரின் சிறப்பம்சங்கள்.

விஜய் மில்டனே ஒளிப்பதிவாளர் என்பதால் ப்ரேம்கள் ஈர்க்கின்றன. குறிப்பாக இறுதியில் மழை பெய்யும் காட்சியும், அதற்கான விஜய் ஆண்டனியின் ரியாக்‌ஷனும், கவனம் பெறுகிறது. மேலும் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான ‘உறவுகள் தொடர்கதை’ பாடலை சேர்த்த இடம் ரசிக்க வைக்கிறது. டீசர் வீடியோ: