EBM News Tamil
Leading News Portal in Tamil

மயிலாப்பூர் நொச்சிமாநகரைச் சேர்ந்தவர் சரவணன் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சரவணனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினார்கள்

சென்னை மயிலாப்பூர் நொச்சிமாநகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர், மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல் 2 மணி அளவில் மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் சரவணனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினார்கள். அவர் உயிர் பிழைக்க தப்பி ஓடினார்.

 

ஓட, ஓட விரட்டி சரவணனை வெட்டி சாய்த்து விட்டு, கொலை வெறி கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சரவணன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

 

இது பற்றி தகவல் கிடைத்தவுடன், கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் உத்தரவின்பேரில், கிழக்கு மண்டல இணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் கவுதமன் ஆகியோர் மேற்பார்வையில் மயிலாப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் போலீஸ் படையுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சரவணனின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மயிலாப்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

 

மயிலாப்பூர் ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவருடன் உள்ள முன்விரோதம் காரணமாக சரவணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த 2020-ம் ஆண்டு காணும்பொங்கல் தினத்தன்று மெரினாவில் வைத்து, மணிகண்டனுடன், சரவணன் சண்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் மணிகண்டன் தாக்கப்பட்டார்.

 

அதற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் நேற்று மணிகண்டன் தனது நண்பர்கள் ஷாம் (21), அஜித் (24), விஜய் (26) ஆகியோருடன் சேர்ந்து, சரவணனை தீர்த்துக்கட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலையாளிகள் மணிகண்டன் உள்பட 4 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இந்த படுகொலை சம்பவம் நேற்று பகலில் பல்லக்குமாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.