புழல் சிறையில் ரெய்டு கைதிகளிடம் 6 செல்போன் பறிமுதல்
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இருந்து 6 செல்போன்களை சிறை போலீசார் பறிமுதல் செய்தனர். புழல் சிறையில் (விசாரணை) அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் தாமரைக்கண்ணன் தலைமையில், ஜெயிலர் உதயகுமார் மற்றும் காவலர்கள் நேற்று முன்தினம் இரவு சிறையில் உள்ள 4வது பிளாக்கில் சோதனை நடத்தினர். அப்போது, கைதிகள் சுரேந்தர், செல்வகுமார், மோகன், கார்த்திக், விஜயகுமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செல்போன்கள் பயன்படுத்தியது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 6 சார்ஜர்கள் மற்றும் 6 சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புழல் போலீசில் ஜெயிலர் உதயகுமார் அளித்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.