EBM News Tamil
Leading News Portal in Tamil

கோவையில் அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகம் : ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு தொழிற்சாலை

கோவை: கோவையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.2 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள், கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 31 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை தடாகம் ரோட்டில், மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை செய்தனர். அப்போது, பைக்கில் வந்த ஒரு வாலிபரை மடக்கினர். அவரிடம் நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தது. அந்த நோட்டை பார்த்த போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதித்ததில், கள்ள நோட்டு என தெரியவந்தது.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஆனந்த் (31) என தெரியவந்தது. அதே பகுதியில் வெங்கிடசாமி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் ஒரு அறையை கம்ப்யூட்டர் புராஜக்ட் வேலை செய்வதாக கூறி 3 மாதம் முன், 2,700 ரூபாய்க்கு மாத வாடகைக்கு எடுத்துள்ளார். இதில், கம்ப்யூட்டர், பிரிண்டர், ஜெராக்ஸ் மெஷின், ஸ்கேனர், பேப்பர் கட்டர், இங்க் மிக்சிங் மெஷின் போன்றவற்றை வைத்து தொழிற்சாலை போல் அமைத்து கள்ள ரூபாய் நோட்டு தயாரித்து வந்துள்ளார்.
நேற்று போலீசார் இந்த கட்டிடத்தில் சோதனை நடத்தி ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இவை அத்தனையும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஆகும். ெமாத்தமாக 5,904 எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. கள்ள நோட்டு தயாரிப்பு, கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவர் மகன் கிதர்முகமது (55) என்பவரது தலைமையில் நடந்துள்ளது. இவருடன் காரமடையை சேர்ந்த சுந்தரம் (38) என்பவரும் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கோவை மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் 3 ஆண்டிற்கு முன் கைது செய்யப்பட்டவர்கள் ஆனந்த் மீதும் இரு சக்கர வாகன திருட்டு தொடர்பாக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நட்பு ஏற்பட்டதாக தெரிகிறது. வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த ஆனந்தை, கிதர் முகமது, சுந்தரம் ஆகியோர் கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தியுள்ளனர்.கள்ள ரூபாய் நோட்டு தயாரிக்க வெள்ளை நிற ஹாட் பேப்பரை பயன்படுத்தியுள்ளனர். இதை, கோவை பெரியகடை வீதியில் உள்ள ஸ்டேஷனரி கடைகளில் வாங்கியுள்ளனர். மைசூரில் இருந்து கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பதற்கான மை வாங்கி வந்துள்ளனர். கம்ப்யூட்டரில் ரூபாய் நோட்டை டிசைன் செய்து, மிகச்சிறிய அளவிலான ஜெராக்ஸ் மெஷினில் மை கலந்து ரூபாய் நோட்டு தயாரித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக சாயிபாபாகாலனி போலீசார், கள்ள நோட்டு தயாரித்ததாக வழக்கு பதிவு செய்து (இந்திய தண்டனை சட்டம் 449, 489 ஏ முதல் டி வரை ) ஆனந்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கிதர்முகமது, சுந்தரம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஸ்கேனர், கட்டர், ஜெராக்ஸ் மெஷின், 4 பாட்டில் கலர் இங்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 3 மாதத்தில் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்டதாக தெரிகிறது. இவற்றை புழக்கத்தில் விட சில ஏஜென்டுகளை பயன்படுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து பத்து சதவீதம் நல்ல ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு, 100 சதவீதம் கள்ளநோட்டுகளை சப்ளை செய்துள்ளனர். அந்த ஏஜென்டுகளையும் போலீசார் தேடி வருகின்றனர். பழக்கத்தில் விடப்பட்ட நோட்டுக்கள் எவ்வளவு என்பதில் மர்மம் நீடிக்கிறது.போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி் வருகின்றனர்.
வங்கிகளுக்கு வேண்டுகோள்
கோவையில் கள்ள நோட்டுகள் சிக்கியதை தொடர்ந்து நகர், புறநகரில் உள்ள 724 வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டுடன் வரும் நபர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வருவது அதிகமாக இருக்கிறது. பணம் மதிப்பு இழப்பிற்கு பின்னர் புதிய ரூபாய் நோட்டில் கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என ரிசர்வ் வங்கி சவாலாக தெரிவித்திருந்தது. ஆனால் மற்ற ரூபாய் நோட்டுகளை காட்டிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை எளிதாக கலர் இங்க் பயன்படுத்தி தயாரிப்பதாக தெரியவந்துள்ளது. புழக்கத்தில் எவ்வளவு கள்ள நோட்டு உள்ளது, அதை மீட்பது எப்படி, புழக்கத்தில் விட்ட ஏஜென்டுகள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 மாநிலங்களில் புழக்கம்
கைதான ஆனந்த் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘எனக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. கள்ள நோட்டு அச்சடிக்க எனக்கு தெரியாது. மற்ற இருவரும் கள்ள நோட்டு அச்சடிப்பார்கள். அவர்கள் சொல்லும் இடத்திற்கு நான் பணத்தை எடுத்து சென்று ஒப்படைப்பேன். எங்களுக்கு அறிமுகமான நபர்கள், 2 ஆயிரம் ரூபாய் ஒரிஜினல் நோட்டு ஒன்று கொடுத்தால் 5 கள்ள ரூபாய் நோட்டு தருவோம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கள்ள ரூபாய் நோட்டு தர மாட்டோம். 10 ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்கு இடையே ஒரிரு கள்ள ரூபாய் நோட்டு வைத்து புழக்கத்தில் விடுவோம். டாஸ்மாக் கடை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது கள்ள நோட்டை தருவோம். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து சிலர் வந்து கள்ள நோட்டு வாங்கி செல்வார்கள், ’’ என்றார்.