EBM News Tamil
Leading News Portal in Tamil

நவாஸ் மகன்களை கைது செய்ய‘இன்டர்போல்’ உதவியை நாடிய பாகிஸ்தான் போலீஸ்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய இன்டர்போல் உதவியை பாகிஸ்தான் போலீஸார் நாடியுள்ளனர்.
லண்டனில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கியது தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதில் ஒரு வழக்கில் நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இருவரும் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதர வழக்குகளில் நவாஸின் மகன்கள் ஹாசன், ஹூசேன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லண்டனில் முகாமிட்டுள்ள இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.
ஹாசனையும் ஹூசேனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை பாகிஸ்தான் போலீஸார் நாடியுள்ளனர். இன்டர்போலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நவாஸின் மகன்கள் விரைவில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று பாகிஸ்தான் போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நவாஸும் மரியமும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் வரும் 8-ம் தேதி மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வருகிறது.