41 நிமிட சந்திப்பு திருப்தி: டிரம்ப்
சிங்கப்பூர்: வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் சந்தித்து 41 நிமிடம் பேசினர்.. இச்சந்திப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்பேச்சுவார்த்தையில், பொருளாதார தடைகளை நீக்குதல், அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தை முக்கியமாக இருந்தது.
இருவரும் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களை பார்த்து கையசைத்த டிரம்ப் கூறியதாவது: பேச்சுவார்த்தை மிகவும் நன்றாக இருந்தது. அனு ஆயுத பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இப்பிரச்னையில் வடகொரியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்றார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறுகையில், அமெரிக்க டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
முன்னதாக,பேச்சு நடத்துவதற்காக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், சிங்கப்பூர் வந்தடைந்தார்.ஆசிய நாடான, சிங்கப்பூரில், இன்று, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு நடந்தது..சிங்கப்பூரின், பிரபல சுற்றுலா தலமான, சென்ட்டோசா தீவில் உள்ள, கேபெல்லா ஓட்டலில் இம்மாநாடு நடந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டை, உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தன. வட கொரிய அதிபர் ஒருவர், அமெரிக்க அதிபரை சந்திப்பது, இதுவே முதன்முறை.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன், நேற்று காலை சிங்கப்பூர் வந்தார். இவரைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், நேற்று மாலை வந்தார்.