இயான் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு
இந்தியாவில் கார் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் தனது இயான் (Eon) மாடல் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பரோடு இந்த கார் உற்பத்தி நிறுத்தப்படும் என நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையின்போது புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தப் போவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இயான் காருக்கு மாற்றாக இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பாதுகாப்பு விதிகளை இயான் மாடல் கார் பூர்த்தி செய்யாது என்று நிறுவனம் கருதுவதால் அந்த காரின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காருக்கான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை மூலம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய மாடல் கார் மத்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிகள் அக்டோபர் 2019-முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி விற்பனைக்கு வருவதற்கு முன்பு அனைத்து மாடல் புதிய கார்களும் கிராஷ் டெஸ்ட் எனப்படும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் பாதுகாப்பான வாகன உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில் விதிமுறைகளை அரசு கடுமையாக்கி வருகிறது.
எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக புதிய மாடல் காரை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனத்தின் பிரபலமான மாடலா சான்ட்ரோ காரை திரும்ப அறிமுகப்படுத்துவது குறித்தும் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. புதிய காருக்கு தற்சமயம் ஏஹெச்2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த காருக்கு சரியான பெயரை பொதுமக்களும் பரிந்துரைக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக மிகப் பெரிய அளவில் பெயர் சூட்டும் இயக்கத்தையே ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் இந்நிறுவனம் நடத்த உள்ளது.
2011-ம் ஆண்டு இயான் மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஒரே சீராக விற்பனை உள்ளது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 60,495 இயான் மாடல் கார்கள் விற்பனையாகியுள்ளன. இருப்பினும் இதைத் தொடர்ந்து வந்த கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ 20 மாடலுடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை குறைந்து வந்துள்ளது. இதனால் உற்பத்தியை நிறுத்தும் முடிவுக்கு ஹூண்டாய் தள்ளப்பட்டுள்ளது.