சூப்பர் சிஎம்… நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்… முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் செய்து வரும் உதவிகள் கவனம் ஈர்த்துள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ், உயிர்களை பறிப்பதுடன் சேர்த்து, பொருளாதாரத்தையும் மிக கடுமையாக சீர்குலைத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. எனவே மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வருமானத்திற்கு வழி இல்லாததால் அவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இந்திய மக்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஸ், ரயில் மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா போன்ற வாகனங்களும் இயக்கப்படுவதில்லை.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து வெளியே வருவதில்லை. மேலும் பொது போக்குவரத்து வாகனங்களும் இயக்கப்படாததால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவு எதிரொலியால், ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா போன்ற வாகனங்களின் டிரைவர்களும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த வாகனங்களின் டிரைவர்களில் பெரும்பாலானோர் தினசரி கிடைக்கும் வருமானம் மூலம், குடும்பத்தை நடத்துபவர்கள் என்பதால், அவர்களின் நிலைமை மோசமாகியுள்ளது.