2030-ல் பேட்டரி வாகனங்கள் சாத்தியமா?
ஆட்டோமொபைல் துறையில் மிகப் பெரும் சவாலாக உருவெடுத்திருப்பது பேட்டரி வாகனங்கள்தான். அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு ஆகியன மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
சூழலைக் காக்கும் அதே வேளையில் அரசுக்கு மிகப் பெரும் நிதிச்சுமையாக, அதாவது பெருமளவு அந்நியச் செலாவணியை அதிகம் இழக்க வேண்டியுள்ளதோடு கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் எதிர்கால திட்டங்களில் ஒன்றுதான் பேட்டரி வாகனமாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் இன்னமும் முற்றிலுமாக பேட்டரி வாகன புழக்கத்துக்கு மாறாத நிலையில் அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும் பேட்டரி வாகனங்களாக மாற்றுவது என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது.
அரசின் இந்த இலக்கு சாத்தியமா? என்ற விவாதம் ஒருபுறம் நடைபெற்றாலும், இது தொடர்பாக புளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ் நடத்திய ஆய்வில் பல புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 2030-ல் முற்றிலும் பேட்டரி வாகனங்களாக மாற்றுவது என்று அரசு இலக்கு நிர்ணயித்திருந்தாலும் மொத்த வாகனங்களில் 7 சதவீத அளவுக்கே பேட்டரி வாகனங்களாக மாறியிருக்கும் என்பது ஆய்வில் புலனாகியுள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2040-ம் ஆண்டில் பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை 27 சதவீத அளவை எட்டியிருக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் பேட்டரி வாகனமாக மாற்றுவது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கட்டுபடியாகும் விலையில் பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள் கிடைக்கும். ஆனால் பேட்டரி வாகனங்கள் அந்த விலையில் கிடைக்காது. அத்துடன் பேட்டரி வாகனங்களாக மாற்றுவது தொடர்பாக உபயோகமான கொள்கைகள் இல்லாததும் இப்பிரச்சினைக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலைமை இவ்விதம் இருக்க, சீனாவில் 2030-ம் ஆண்டில் பேட்டரி வாகன உபயோகம் 41 சதவீத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே அதிக அளவில் எரிபொருள் உபயோகிக்கும் இரண்டாவது பெரிய நாடாக சீனா திகழ்கிறது. அங்கு 2017-ம் ஆண்டிலேயே 8 லட்சம் பேட்டரி வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.
இதனால் அடுத்துவரும் ஆண்டுகளில் பேட்டரி வாகன விற்பனை அதிகரித்து அடுத்த 12 ஆண்டுகளில் இது 41 சதவீத அளவுக்கு உயரும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பேட்டரி வாகன விற்பனையானது சர்வதேச அளவில் விற்பனையானதை விட 49 சதவீத அளவுக்கு சீனாவில் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் 6 ஆயிரம் நெடுஞ்சாலை வழிகள் உள்ளன. இவற்றில் பேட்டரி வாகன உபயோகிப்பாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 2017-ல் விற்பனையான பேட்டரி வாகன எண்ணிக்கை வெறும் 2 ஆயிரம்தான். இது 2022-ம் ஆண்டில் ஆண்டுக்கு 30 ஆயிரமாக உயரும். அதுவும் பெரும்பாலும் அரசு வாகனங்கள் மட்டுமே பேட்டரி வாகனமாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பேட்டரி வாகன உபயோகம் பிரபலமாகாததற்கு அரசின் கொள்கைகள் ஒரு காரணம். அத்துடன் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு நம்பகமான மையங்கள் உருவாக்கப்படாதது மற்றொரு காரணம். அதேபோல மாநில மின்வாரியங்கள் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் அளவுக்கு நிதி வலிமை உள்ளதாக இல்லை என்பது முக்கிய காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சீனாவில் பேட்டரி வாகனங்களுக்கு அரசு அதிக அளவில் சலுகைகளை வழங்குகிறது. அதேபோல அந்நாட்டின் இரண்டு மாகாண மின்சார வாரியங்கள் சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கு அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. மேலும் 2015-ம் ஆண்டிலேயே சீன அரசு பேட்டரி வாகனங்களுக்கான புதிய மானிய கொள்கையை அறிவித்து விட்டதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
2016-ம் ஆண்டில் மத்திய எரிசக்தி, நிலக்கரி மற்றும் மரபு சாரா எரிசக்தித்துறை அமைச்சர் பியுஷ் கோயல், 2030-ம் ஆண்டுக்குள் அனைத்தும் பேட்டரி வாகனங்களாக மாற்றுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியும் இது தொடர்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தினார். ஆனால் கடந்த ஆண்டு பேட்டரி வாகனங்களுக்கு மாறுவதை காலம்தான் தீர்மானிக்கும் என்ற மழுப்பலான பதில் அரசு தரப்பிலிருந்து வெளியானது. இது பேட்டரி வாகனங்களுக்கு மாறும் முடிவில் மந்த கதியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்திலேயே மத்திய தொழில்துறை அமைச்சர் பேட்டரி வாகனங்களுக்கான மாற்றத்துக்கான இலக்கு 2030 என நிர்ணயிக்கவில்லை என்றார். இதனால் பேட்டரி வாகனங்களுக்கு மாறுவது என்பது மேலும் இழுபறியாகிவிட்டது.
சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் சார்ஜிங் மையங்கள் அமைப்பது தொடர்பான கொள்கை அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் வாகன உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் இது செயல்படுவதற்கான காலம் மேலும் தாமதமாகியுள்ளது. பேட்டரி வாகன புழக்கம் அதிகரிக்காத சூழலில் சார்ஜிங் மையங்களில் முதலீடு செய்வதில் தனியார் நிறுவனங்கள் தற்போது தயக்கம் காட்டுகின்றன.