அமெரிக்கா – வட கொரியா உறவில் புது அத்தியாயம்: டிரம்ப்
சிங்கப்பூர்: அமெரிக்கா – வட கொரியா உறவில் புது அத்தியாயம் துவக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்த பிறகு நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது:
வரவேற்கத்தக்கது
புதிய வரலாறுக்காக தயாராகி வருகிறோம். புதிய அத்தியாயத்தை எழுத நாங்கள் தயாராகி விட்டோம். கடந்த காலங்கள் வரலாற்றை வரையறை செய்யாது. கிம் ஜாங் உன்னுடனான் சந்திப்பு நேர்மையானது. அவர் மிகவும் திறமையானவர். இரு நாடுகளுக்கு இடையிலான கசப்புணர்வு மறைந்துள்ளது. இந்த மாநாட்டை நடத்திய சிங்கப்பூருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அணு ஆயுதங்களை ஒழிப்பதாக கிம் ஜாங் உன் உறுதியளித்துள்ளார். நாங்கள் போர் விளையாட்டுகளை நிறுத்தியுள்ளோம். கொரிய தீப கற்பத்தில் அணு ஆயுத அச்சுறுத்தல் அகற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா- வட கொரியா உறவில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது. வட கொரியா ஏவுகணை தளத்தை அழித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பொருளாதார தடை
தனது நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க கிம் ஜாங் உன்னுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போரை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால், துணிச்சல்காரர்கள் தான் அமைதியை ஏற்படுத்த முடியும். அணு ஆயுதங்கள் அழிக்கப்படும் போது, வட கொரியா மீதான பொருளாதார தடை அகற்றப்படும். மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக கிம் ஜாங் உன்னுடன் ஆலோசனை நடத்தினேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஈரான் வேறு மாதிரியான நாடாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.