Ultimate magazine theme for WordPress.

சென்னையில் ஒரே நாளில் 44 சவரன் செயின் பறிப்பு: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த 5 ஈரானியக் கொள்ளையர்கள் பிடிபட்டனர்

சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டும், நேற்று ஒரே நாளில் 44 சவரன் தங்க நகைகளை வழிப்பறி செய்து ஆந்திர எல்லைவரை சென்ற ஈரானியக் கொள்ளையர்களை போலீஸார் துரத்திப் பிடித்து கைது செய்தனர்.
சென்னையில் வழிப்பறி, செயின் பறிப்பு சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களையும் தாக்கி வழிப்பறியில் ஈடுபடுவது, கத்தியால் வெட்டுவது, வாகனங்களை பறித்துச் செல்வது போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வந்தன.
இவை தவிர இரு சக்கர வாகனங்களை திருடிச்செல்வதும் அதிகரித்து வந்தது. கொள்ளையர்கள் ஒரே நாளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை, வாகன சோதனை சென்னையில் அனைத்து இடங்களிலும் நள்ளிரவில் நடத்தப்பட்டது.
இதன் விளைவாக 3000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் 5 நாட்களில் பிடிபட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அனைத்து போலீஸ் சோதனையையும் மீறி ஒரே நாளில் 44 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்டது. கடந்த மாதம் ஒரே நாளில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், பாண்டிபஜார், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நாளில் பலரிடம் மொத்தம் 60 சவரன் வரை செயின் பறிக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் புளியந்தோப்பு, ராயப்பேட்டை, திருமங்கலம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே கும்பலைச் சார்ந்த நபர்கள் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். புளியந்தோப்பில் ஸ்ட்ரான்ஸ் சாலையில் நடந்து சென்ற சுந்தரகாண்டம்(60) என்ற மூதாட்டியிடம் 13 சவரன் நகையை ஒரு கும்பல் பறித்துச் சென்றது.
இதேபோன்று மாதவரம் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்த குமாரி (70) என்கிற மூதாட்டியிடம் அதே கும்பல் 6 சவரன் செயினைப் பறித்தது. பின்னர் புழல் விநாயகபுரத்தில் நடந்து சென்ற சுதர்சனம்மாள் (71) என்ற மூதாட்டியிடம் 7 சவரன் நகையைப் பறித்தது.
பின்னர் அதே கும்பல் அண்ணாநகர் பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயா (60) என்ற மூதாட்டியிடமிருந்து 9 சவரன் நகையைப் பறித்துச் சென்றது. இதே போன்று சென்னை மாங்காட்டைச் சேர்ந்த கவிதா(43) என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவுப் பணி முடிந்து காலை வீட்டுக்கு செல்ல ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சென்றபோது இவரிடமிருந்து 9 சவரன் தாலிச் சரடு பறிக்கப்பட்டது.
மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே நபர் என போலீஸார் விசாரணையிலும் , சம்பந்தப்பட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளிலும் தெரியவந்தது. போலீஸாரிடம் பாதிக்கப்பட்ட ஜெயா என்பவர் வாகனத்தின் எண்ணையும் (TN0-5 0819) என்ன வாகனம் என்பதையும் குறித்து கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியபோது, அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக தெரியவந்தது. இரவு நேரத்தில் காவல் துறையினர் கெடுபிடி இருந்ததால் அதிகாலை 6 மணி முதல் 11 மணிவரை கைவரிசை காட்டியுள்ளனர். சிசிடிவி காட்சியில் வழிப்பறி நபர் அணிந்திருந்த தொப்பி ஈரானியக் கொள்ளையர்கள் அணிவது என்ற சிறு அடையாளத்தை வைத்து போலீஸார் துப்பு துலக்கினர்.
கொள்ளையர்கள் இறுதியாக புழலில் வழிப்பறி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளை மாதவரத்தில் விட்டுவிட்டு தங்களுக்குச் சொந்தமான மகாராஷ்டிர பதிவெண் கொண்ட காரில் ஆந்திரா நோக்கிச் சென்று கொண்டிருப்பதை போலீஸார் தெரிந்து கொண்டனர். அவர்கள் செல்லும் காரின் எண் தெரிந்தவுடன் போலீஸார் அதை கண்காணிக்கத் தொடங்கினர். வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேமந்த சின்ஹா தலைமையிலான தனிப்படை ஆந்திரா நோக்கி காரை விரட்டியது.
கார் எப்படியும் சுங்கச்சாவடியில் நின்றுதான் போக வேண்டும் என்பதால் கர்னூல் சுங்கச்சாவடியில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு காத்திருந்த போலீஸார் குறிப்பிட்ட கார் வந்தவுடன் மடக்கிப் பிடித்தனர். காரில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அப்பாஸ், அலி, தவ்ஹித், நவாப் உள்ளிட்ட 5 பேர் இருந்தனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். பிடிபட்ட 5 பேரும் ஈரானியக் கொள்ளையர்கள் என்பது அப்போது தெரியவந்தது.
பின்னர் அவர்களை இணை ஆணையர் தலைமையிலான போலீஸார் சென்னை அழைத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக சென்னை காவல் துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்த ஈரானியக் கொள்ளையர்களில் 5 பேர் தற்போது சிக்கியுள்ளனர்.
கடந்த மாதம் வழிப்பறி செய்த நகைகளை சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று ரமலான் பண்டிகையில் நன்றாக செலவு செய்துவிட்டு, பின்னர் சொந்தமான காரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மாதவரம் வந்து இறங்கியுள்ளனர். அங்கு பல்சர் 220 சிசி மோட்டார் பைக்கை திருடி செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிடிபட்டவர்களிடம் நேற்று வழிப்பறி செய்யப்பட்ட 44 சவரன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விதவிதமான கருவிகள் இருந்ததைப் பார்த்து போலீஸார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.