பாக்தாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்
இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு பரபரப்பான கடைத்தெருவில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்லாமியப் பண்டிகையான ஈகைத் திருநாளுக்கு மக்கள் தயாராகி வந்த நிலையில், வடக்கு சத்ர் பகுதியில் உள்ள ஒரு சந்தையில் குண்டு வெடித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பாக்தாத்தில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு இதுவாகும்.
திங்களன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்த சந்தை பகுதியில், பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள மத்திய காவல்துறை படைப்பிரிவின் தளபதியைக் கைது செய்யப் பிரதமர் முஸ்தபா அல் காதிமி உத்தரவிட்டுள்ளார் எனக்கூறியுள்ள இராக் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர், இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் வெடிகுண்டு இருந்த அங்கியை வெடிக்கச் செய்தார் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
2017ஆம் ஆண்டின் இறுதியில், சுன்னி முஸ்லிம் ஜிகாதி குழுவுக்கு எதிரான சண்டையில், தாங்கள் வெற்றி அடைந்ததாக இராக் அறிவித்தது.
ஆனால், அந்த ஜிகாதி குழுவை சேர்ந்த ஸ்லீப்பர் செல்கள் இன்னும் நாட்டில் உள்ளனர். பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் வாழும், சத்ர் நகரத்தில் உள்ள ஒரு சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. கடந்த ஜனவரி மாதம் தயரன் சதுக்கத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலையும் தாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ் கூறியது.
இந்த குண்டு வெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டனர். மூன்று ஆண்டுகளில் தலைநகர் பாக்தாத்தில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு அதுதான்.