EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனாவால் ஏற்பட்ட சேதம்: சீனாவிடம் இழப்பீடு கோரத் திட்டம் – டிரம்ப்..!

கொரோனாவால் ஏற்பட்ட சேதத்திற்கு சீனாவிடம் இழப்பீடு கோரவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிம் பேசிய அவர், கொரோனா பரவத் தொடங்கிய இடத்திலேயே சீனாவால் அதை விரைவாக தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றும் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அந்நாட்டை பொறுப்பாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் டிரம்ப் கூறினார். மேலும் சீனாவிடம் 16 ஆயிரத்து 500 கோடி டாலர் இழப்பீடு கோர வேண்டும் என ஜெர்மன் நாளிதழ் சமீபத்தில் தலையங்கம் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டிய டிரம்ப், அமெரிக்காவும் இதுபோல் இழப்பீடு கோரக்கூடும் என தெரிவித்தார்.

மேலும் இந்த இழப்பீடு குறித்து ஏற்கனவே அமெரிக்காவின் மிசோரி மாகாண அரசு அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் கொரோனா குறித்த ஆபத்தை உலகத்திடம் இருந்து சீனா மறைத்துவிட்டதாகக் கூறி, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது, ஆபத்தை விளைவித்தது ஆகியவற்றுக்காக சீனாவிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என்று கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.