கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி மீண்டுவரும் டென்மார்க்.. எப்படி சாத்தியமானது? – டென்மார்க் தமிழர் தரும் புதிய தகவல்கள்
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், டென்மார்க் நாடு கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தி, பெரிய பாதிப்புகளைத் தவிர்த்துள்ளது.
டென்மார்க அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டென்மார்க் வாழ் தமிழர் சுமேசு குமார் நியூஸ்18-க்கு பகிர்ந்துள்ளார்.
டென்மார்க் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
‘கொரோனா தொற்று சீனாவுக்கு அடுத்ததாக பரவ ஆரம்பித்தது ஐரோப்பிய நாடான இத்தாலியில். கடந்த பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் இத்தாலியில் பரவ ஆரம்பித்து, ஒரு சில வாரங்களில் அங்கு ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டுவிட்டு மெல்ல மெல்ல மற்ற ஐரோப்பா நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. அந்த வகையில் டென்மார்க் நாட்டில் முதல் கொரோனா தொற்று, இத்தாலிக்கு பனிச்சறுக்கு சென்று விட்டு திரும்பிய ஒருவரால் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி உறுதியானது.
5.8 மில்லியன் (58 லட்சம்) மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடான டென்மார்க் கொரோனா தொற்று நடவடிக்கைக்கு தயாரானது. அடுத்த இரண்டு வாரங்களில் டென்மார்க் அரசு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், அனைத்து அதிகாரிகளிடமும் விவாதித்து பல்வேறு நடவடிக்கைகளையும், மருத்துவ முன்னேற்பாடுகளையும் விரிவாக திட்டமிட்டு சரியாக மார்ச் 12 -ம் தேதி நாடெங்கும் ஊரடங்கை அறிவித்தது.