கொரோனா – கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கிய பல நாடுகள்
கொரோனாவின் பிடியில் இருந்து தடுப்பூசி மட்டுமே மக்களையும், பொருளாதாரத்தையும் காக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனிடையே பல நாடுகள் கொரோனாவுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளன
உலகம் முழுவதும் கொரோனா வைரசின் கோரதாண்டவம் அதிகரித்து வருகிறது. தடுப்பூசியை கண்டுபிடிப்பது மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும் என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார். தடுப்பூசியே மக்களையும், பொருளாதாரத்தையும் காக்க உதவும் என்பதால், அனைத்து நாடுகளும் 2020ஆம் ஆண்டுக்குள் தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா கொரோனாவின் உட்சபட்ச பாதிப்பை கடந்து விட்டதாகவும், இம்மாத இறுதிக்குள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கான நெறிமுறைகள் உடனடியாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் டிரம்ப கூறினார்.
இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து இத்தாலியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கியூசெப் காண்டே தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. டென்மார்க்கில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. போலந்து நாட்டில் பூங்காக்கள், வனப்பகுதிகள் வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மக்கள் வெளியில் நடமாடுவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும் போலந்து அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போதைய கட்டுப்பாடுகள் மேலும் 4 வாரங்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியில் தேசிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் சில 7 மாகாணங்களில் மட்டுமே அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் அவசரநிலை விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.