2022 வரை சமூக விலகல் தேவைப்படலாம் – ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள்..!
முறையான சிகிச்சை முறைகளோ, தடுப்பூசியோ உருவாக்கப்படும் வரை, அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலுக்கான அவசியம் இருப்பதாக ஆய்வுகள் வழியாகத் தெரிவிக்கிறது ஹார்வார்டு பொது சுகாதார நிறுவனம்.
இரு நாட்களுக்கு முன்பாக ஜர்னல் சைன்ஸ் இதழில் ஆய்வு முடிவுகளை வெளியிட்ட ஹார்வார்டு கல்வி நிறுவனம், “முறையான சிகிச்சை முறைகளோ, தடுப்பூசியோ உருவாக்கப்படும் வரை, மக்களின் சமூக விலக்கல் நடைமுறைகளும், அடிக்கடி மக்களை வீட்டுக்குள் இருக்க வைப்பதற்கான அரசின் முயற்சிகளும் அவசியம்” என ஆய்வு முடிவுகளின் வழியாக வலியுறுத்தியுள்ளது ஹார்வார்டு நிறுவனம்.
மேலும், ஏற்கனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தொற்றை எதிர்த்து உருவாகும் ஆண்டிபாடிகள் எவ்வளவு காலம் உடலில் நிலைத்திருக்கிறது. அது எந்தவிதமான எதிர்ப்புத்திறனை உருவாக்குகிறது என்பதும் இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கப்படாத ஒன்றாகவே இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஹார்வார்டின் ஆய்வுகள்.
அமெரிக்காவில், 644,348 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 28,554 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 48,708 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.