EBM News Tamil
Leading News Portal in Tamil

அமெரிக்காவை வீழ்த்திய அதே டெக்னிக்.. கொரோனாவை விரட்டிய குட்டி ராஜ்ஜியம்.. வியக்க வைக்கும் வியட்நாம்

ஹனோய்: கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் மிக குட்டி நாடான வியட்நாம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. உலகிற்கே எடுத்துக்காட்டாக வியட்நாம் மாறியுள்ளது.

1 நவம்பர் 1955 – 30 ஏப்ரல் 1975 வரை தெற்கு வியாட்நாமிற்கும், வடக்கு வியாட்நாமிற்கும் இடையில் நடந்த போரை குறித்து ஒரு சின்ன ரீ கேப்பை இங்கே பார்க்கலாம்… 20 வருடங்கள் நடந்த இந்த போரில் தெற்கு வியட்நாமை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தீவிரமாக ஆதரித்தது. அதே சமயம் வடக்கு வியட்நாமை சீனா, ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள் தீவிரமாக ஆதரித்தது. பனிபோர் போல நடந்து கொண்டு இருந்த இந்த யுத்தத்தில் கடைசியில் வென்றது வடக்கு வியட்நாம். வலிமையான விமானப்படை, டாங்கிகள், துப்பாக்கிகளை வைத்து இருந்த அமெரிக்காவை வடக்கு வியட்நாம் வீரர்கள் பெரிய ஆயுத பலம் இன்றியே அடித்து விரட்டினார்கள். அதோடு தெற்கு வியட்நாமையும் கைப்பற்றினார்கள். உலகை எல்லாம் வென்ற அமெரிக்கா, வியட்நாமிடம் சுருண்டு விழுந்து ”நாக் அவுட்” ஆனது.

பலம் வாய்ந்த அமெரிக்காவை வெல்ல வியட்நாமிற்கு விஞ்ஞானம் உதவவில்லை, பொருளாதாரம் உதவவில்லை, ஆயுத பலம் உதவவில்லை. அவர்களுக்கு உதவியது ஒன்றுதான்.. கொரில்லா டெக்னிக்! மிக பழமையான போர் முறைகளை பயன்படுத்தி களத்தில் இறங்கி, ஒற்றுமையாக சண்டையிட்டுதான் அமெரிக்காவை வியட்நாம் வீழ்த்தியது. தொழில்நுட்பத்தை நம்பாமல் பழைய முறைப்படி மக்களை திரட்டி, ஒன்றாக சண்டை போட்டு அமெரிக்காவை வீழ்த்தியது.

தற்போது அதேபோல்தான் வியட்நாம் மிக பழமையான டெக்னிக்கை பயன்படுத்தி கொரோனாவை வீழ்த்தி உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் சீனாவில் மிகப்பெரிய அளவில் கொரோனா விஸ்வரூபம் எடுத்த நேரம். சீனாவிற்கு வெளியேவும் கொரோனா வேகமாக பரவியது. வியட்நாமிலும் கொரோனா பரவியது. 160 பேர் வெகு சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வியட்நாம் கதை முடிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.