EBM News Tamil
Leading News Portal in Tamil

20 பேர் பலி: சுவிட்சர்லாந்தில் 2-ம் உலகப்போர் விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்து

சுவிட்சர்லாந்தில் ஜுரிச் நகர் அருகே 20 பயணிகளுடன் சென்ற 2-ம் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட சிறிய ரக விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
கடந்த 1939-ம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஜேயு52 எச்பி-எஓடி என்ற பழமையான விமானம் டிசினோ நகரில் இருந்து, டியுபென்டார்ப் ராணுவ விமானத் தளத்துக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டது. இதில் 11 ஆண்கள், 9 பெண்கள் பயணித்தனர்.
விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான பிஸ் செக்னாஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே விமானத்தில் பயணித்த 20 பேரும் பலியானார்கள்.
இது குறித்து போலீஸ் செய்தித்தொடர்பாளர் அனிடா சென்டி கூறுகையில், “ இரண்டாம் உலகப்போரில் தயாரிக்கப்பட்ட பழைய ஜங்க்கர் ரக விமானத்தில் 20 பேர் பேர் பயணித்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக செக்னாஸ் மலைமீது மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேரும் பலியானார்கள். மீட்புப்பணியில் 5-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
விமானத்தின் உடைந்த பாகங்கள் மலைப்பகுதியில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. விமானம் மோதிய வேகத்தில் வெடித்ததுதான் அனைவரும் பலியானதற்கு காரணமாக இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இந்த விமானம் குறித்து அறிந்ததும் விமானத்தை தயாரித்த ஜேயு நிறுவனமும் வருத்தம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சேவை அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டது.