ஓடுபாதையிலிருந்து தடம் மாறிய விமானம்: உயிர் தப்பிய 142 பயணிகள் வேறு விமானத்தில் பயணம்
ரியாத் விமான நிலையத்திலிருந்து இன்று காலை மும்பை புறப்பட்ட விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு தடம் மாறிச் சென்றதில் பயணிகளும் விமான ஊழியர்களும் எந்தவிதக் காயமும் இன்றி உயிர் தப்பினர்.
இன்று காலை (வெள்ளிக்கிழமை) 9 டபிள்யூ523 ரியாத் மும்பை விமானம் மும்பைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓடுபாதையை விட்டு விலகி ஓடியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக 142 பயணிகளும் விமான ஊழியர்கள் 7 பேரும் எந்தவிதக் காயமும் இன்றி உயிர் தப்பினர்.
விபத்து ஏற்பட்ட விமானத்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, முனையம் கட்டிடத்திற்குள் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் பி 737-800 தனியார் போயிங் விமானம் மூலம் மும்பை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஜெட் ஏர்வேஸ் இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு தெரிவித்துள்ளதுடன் ரியாத் அதிகாரிகள் பயணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதைப் பற்றியும் தெரிவித்தது.
மேலும், விமானங்கள் இயக்குவது தொடர்பான முழுமையான நெட்வொர்க்குகளில் எந்தவிதச் சிக்கலும் ஏற்படவில்லை என்றும் மற்ற சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.