பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அரசு இல்லத்துக்கு மாறுகிறார் இம்ரான் கான்
பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் அரசியல்வாதியுமான இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. எனினும், ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை. எனவே, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சி அமைக்கிறார். வரும் 11-ம் தேதி பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நாட்டு மக்களிடம் இம்ரான் உரையாற்றும் போது, ‘‘பாகிஸ்தானில் பிரதமருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய பங்களாவில் தங்க மாட்டேன். அரசு செலவுகளைக் குறைப்பேன். எளிமையாக இருப்பேன்’’ என்று தெரிவித்தார்.
தற்போது இஸ்லாமாபாத்தின் பனிகாலா பகுதியில் இம்ரான் வசிக்கிறார். அந்த இடம் பாதுகாப்புக்கு சரியானதாக இல்லை என்று உயரதிகாரிகள் எடுத்துரைத்துள்ள
னர். அத்துடன், சில யோசனைகளையும் தெரிவித்துள்ளனர். அதன்படி, இஸ்லாமாபாத்தில் அமைச்சர்கள் என்கிளேவ் பகுதியில் தங்க இம்ரான் ஒப்புக் கொண்டார். எனினும், பிளாட் போதும் என்று கூறியிருக்கிறார். அதையும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கவில்லை.
இதையடுத்து, அமைச்சர்கள் என்கிளேவ் பகுதியில் ஆடம்பரம் இல்லாத தனி வீட்டில் தங்க இம்ரான் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது இம்ரான் கானுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.