EBM News Tamil
Leading News Portal in Tamil

பாகிஸ்தானின் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிப்பு: அமெரிக்கா நடவடிக்கை

லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மும்பை தாக்குதல் உட்பட இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டுதல், அங்குள்ள தீவிரவாதிகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளிலும் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே, இந்த அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சையதை அமெரிக்க அரசு ஏற்கனவே சர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அண்மையில் நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் கூட ஹபீஸ் சையதாலும், அவரது மில்லி முஸ்லிம் கட்சியாலும் நேரடியாக போட்டியிட முடியவில்லை.
இந்நிலையில், ஹபீஸ் சையதின் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் அல் தாஹில் என்பவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்தது. இவர், இந்தியாவில் கடந்த 1997 முதல் 2001 வரை நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர் ஆவார். 2014-ம் ஆண்டு இராக்கில் தீவிரவாதக் குழுக்களுடன் ஆலோசனை நடத்த வந்த இவரை, பிரிட்டன் உளவுத்துறையினர் கைது செய்து, பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
பின்னர், பாகிஸ்தான் சிறையில் இருந்து 2016-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட தாஹில், ஜம்மு பிராந்தியத்துக்கான லஷ்கர்-இ- தொய்பா கமாண்டராக நியமிக்கப்பட்டதாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதி மற்றும் ஆயுத உதவிகளை பெற்று தரும் பணியில் ஈடுபட்டுள்ள ஹமீது உல் ஹசன் மற்றும் அப்துல் ஜபார் ஆகிய இருவரையும் சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அயல்நாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டுத் துறை நேற்று அறிவித்துள்ளது.
சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்கப்படுவதன் மூலமாக, மேற்குறிப்பிட்ட மூவருக்கும் அமெரிக்க அரசின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இருந்த சொத்துகள் முடக்கப்
பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து தனி நபர் அல்லது குழுக்கள் மூலமாக நிதியுதவி வழங்கப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.