ட்ரம்ப் நிர்வாகத்தின் ‘மனிதகுல விரோத குற்றங்கள்’ – சிறைப்பிடிப்பு வளாகங்களைப் பார்வையிட்ட இந்திய வம்சாவளி செனட்டர் கடும் குற்றச்சாட்டு
குடியேற்றச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வரும் அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் அங்கு கைது செய்யப்படுபவர்கள் மீது மனித விரோதக் குற்றங்கள் நடத்தப்படுவதாக இந்திய வம்சாவளி செனட்டர் கமலா ஹாரிஸ் கடும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து பிரிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றும் விதிமீறல் என்று கைது செய்தவர்களை முகாம்களில் கிட்டத்தட்ட சிறை போன்ற ஓர் அமைப்பில் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். கலிபோர்னியாவில் உள்ள ஒடே மேசா சிறைப்பிடிப்பு முகாமுக்கு இவர் நேரில் சென்று பார்வையிட்டதையடுத்து இவ்வாறு கூறியுள்ளார்.
நான் சில தாய்மார்களிடம் முகாம்களில் பேசினேன், அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பிரித்து எடுத்துச் சென்றனர் என்றும் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூற நாங்கள் அவர்கள் தனியாக இல்லை நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் தெரிவித்தோம்.
இந்த முகாம்கள் உண்மையை இழிவானவை, ட்ரம்ப் நிர்வாகத்தின் இழிவான செயல், நிச்சயம் இது மனித குல விரோத குற்றமே. அதுவும் இதனை அமெரிக்க அரசு செய்கிறது, இதனை இனி அனுமதிக்கமுடியாது, நாம் இதனை நிறுத்தியாக வேண்டும்.
ஜனநாயகக் கட்சியின் இந்திய வம்சாவளி செனட்டரான கமலா ஹாரிஸ் மேலும் கூறும்போது குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத மனிதவிரோதக் குற்றம், அவர்கள் நாட்டில் வன்முறைக்குப் பயந்து அடைக்கலம் தேடி வருவோரை அமெரிக்க அரசு அவர்களும் ஏதோ பன்னாட்டு தாதாக்கள், தீவிரவாதிகள் போல் நடத்துவது அமெரிக்க அரசியல், பண்பாட்டுக்கு எதிரானது.
சில பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் எங்கு இருக்கின்றன என்பதே தெரியவில்லை. குழந்தைகளுடன் தொலைபேசியில் கூட உரையாட முடியவில்லை என்று வருந்துகின்றனர் என்று கூறிய ஹாரிஸ், “என்னுடைய முகாம் வருகையின் போது நான் குழந்தைகளைப் பிரிந்த தாயார்களுடன் பேசினேன். சில குழந்தைகளுக்கு வயது 5தான் ஆகிறது. எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸைச் சேர்ந்த 3 பெண்களிடம் பேசினேன். எல்லையிலேயே இவர்களது குடும்பம் பிரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.
இது ஏதோ முகாம் அல்ல, இது முழுக்க முழுக்க சிறையே. என்றார் கமலா ஹாரிஸ்
2020-ல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளாராக கருதப்படுபவர் கமலா ஹாரிஸ், இவர் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை வைத்திருப்பவர்.
“ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதற்கான அளவு கோல் அது தன் குழந்தைகளை எப்படிப் பராமரிக்கிறது என்பதைப் பொறுத்ததே. நம்மில் குறைந்தவர்களை, நலிவுற்றோரை எப்படி நடத்துகிறோம் என்பதில்தான் ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதைக் கூற முடியும்.
ட்ரம்பின் முஸ்லிம் தடை, மற்றும் சமீபத்திய மனிதவிரோதக் கொள்கைகள் உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது. நாம் இவர்களுக்காக நிற்கிறோம், இத்தகையோரைக் கைவிட்டு நட்டாத்தில் விடுதல் கூடாது” என்று ஹாரிஸ் ட்வீட் செய்துள்ளார்.