EBM News Tamil
Leading News Portal in Tamil

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக பிடிபட்ட 100 இந்தியர்களின் நிலை என்ன?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 100 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக 1940 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகள் தனியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு வலுத்ததால் குழந்தைகளைப் பெற்றோரிடம் சேர்க்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டார்.
தடுப்பு மையங்களில் அடைப்பு
இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக 100 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு நியூ மெக்ஸிகோ மற்றும் ஒரிகானில் உள்ள மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் சீக்கியர்கள். இந்தியர்களின் குழந்தைகள் தனியாகப் பிரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய பெற்றோர் மற்றும் குழந்தைகளின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நியூ மெக்ஸிகோ தடுப்பு மையத்துக்கு விரைவில் தூதரக அதிகாரிகள் சென்று இந்தியர்களுக்கான சட்ட உதவிகளை ஏற்பாடு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து வடஅமெரிக்காவின் சீக்கிய கூட்டமைப்பைச் சேர்ந்த சத்னம் சிங் சாஹல் கூறும்போது, ‘‘கடந்த 2013 முதல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக 27,000 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களில் 4,000 பேர் பெண்கள், 350 பேர் குழந்தைகள். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற தனியார் ஏஜெண்டுகள் ரூ.35 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணம் வசூலிக்கின்றனர். பெரும்பாலான சீக்கியர்கள் அவர்கள் மூலம் அமெரிக்காவுக்குள் நுழைந்து போலீஸாரிடம் சிக்கிக் கொள்கின்றனர்’’ என்றார்.
நாடு தழுவிய போராட்டம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெய்பால் கூறியபோது, அதிபர் ட்ரம்ப், மனித உரிமைகளை மீறி வருகிறார். அவரின் கடுமையான கொள்கைகளை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 30-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.