கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்திக்க அனுமதி மறுப்பு: சீனப் பயணத்தை ரத்து செய்தார் மம்தா
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து பேச மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. இதனால் தனது சீன பயணத்தையே மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார்.
சீனா – இந்தியா இடையே சமீபகாலமாக வர்த்தக ரீதியான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருநாட்டு குழுவினர் மற்ற நாட்டுக்கு சென்று வர்த்தகம், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அத்துடன் இருநாட்டு அரசியல் தொடர்பான தகவல்களையும் அவர்கள் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் இந்த ஒத்துழைப்பு சந்திப்புக்கு மாநில முதல்வர்கள் தலைமை ஏற்று செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. சட்டிஸ்கர் முதல்வர் ரமண் சிங் உள்ளிட்ட முதல்வர்கள் இந்திய வர்த்தக குழுவிற்கு தலைமை ஏற்று சென்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து செல்லும் வர்த்தக குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவினரையும் சந்தித்து அரசியல் தொடர்பான கருத்து பரிமாற்றங்களையும் மேற்கொள்கினறனர்.
அதன்படி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த முறை இந்திய குழுவினருக்கு தலைமை ஏற்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசி ஏற்பாடுகளை செய்தார். இந்திய குழுவினர் நேற்று சீனா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை, மம்தா பானர்ஜி சந்தித்து பேச அனுமதி அளிக்கப்படவில்லை.
மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் முன்பு இருதுருவமாக இருந்தனர். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினருடன், மம்தா பானர்ஜி சந்திப்புக்கு அனுமதி அளிக்க சீன அரசு மறுத்து விட்டது. சீனா செல்வதாற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு மம்தா பானர்ஜி நேற்று மாலை புறப்பட வேண்டும்.
விமானம் புறப்பட சில மணிநேரங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த தகவலை கொல்கத்தாவில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் மம்தா அலுவலத்திற்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த மம்தா பானர்ஜி தனது பயணத்தை உடனடியாக ரத்து செய்தார்.
வெறும் வர்த்தக குழுவினருக்கு தலைமை ஏற்று செல்ல விருப்பமில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ‘‘வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டதால் தான் சீன பயணத்திற்கு ஒப்புக் கொண்டேன். சீன அரசின் இந்த முடிவால் இருநாடுகளிடையேயான உறவு சீர்கெட்டு போய்விடக் கூடாது என்பதற்காகவே எனது பயணத்தை ரத்து செய்துள்ளேன்’’ எனக் கூறினார்.