EBM News Tamil
Leading News Portal in Tamil

கடும் எதிர்ப்பால் பணிந்தார் அதிபர் டிரம்ப்: அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவு ரத்து

அமெரிக்காவுக்குள் எல்லைகளின் வழியே சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கும் திட்டத்தை அதிபர் டெனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்.
அகிதிகளின் குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது மிகக் கொடுமையான செயல் என்று அதிபர் டிரம்பின் மனைவி மெலேனியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அந்தக் கடினமான உத்தரவை டிரம்ப் திரும்பப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் எல்லை வழியாகச் சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மெக்சிகோ எல்லை வழியாக வரும் அகதிகளைச் சட்டவிரோத குடியேற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து காப்பகங்களில் தங்கவைப்பதாகும்.
அமெரிக்க சட்டப்படி சட்டவிரோத குடியேற்றத்தில் குழந்தைகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதால், குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகின்றனர்.
அதிபர் டிரம்பின் இந்த உத்தரவுக்கு அவரின் மனைவி மெலேனியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி, லாரா புஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து, மனிதநேயமற்ற செயல் என்றும் கண்டித்துள்ளனர். ஆனால், அகதிகள் வருகையைக் கட்டுப்படுத்த இதுதான் சரியான வழியாகும் என்று டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார்.
கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல் ஜுன் 9-ம் தேதி வரை 2,206 பெற்றோர்களிடம் இருந்து, 2,342 பச்சிளங்குழந்தைகள் பிரிக்கப்பட்டு சவுத் டெக்ஸாஸில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் அடுக்குசிறை போல காப்பகம் அமைக்கப்பட்டு அதில் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். பிரிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் முறைப்படி ஒப்படைக்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஊடகங்களிடம் கூறுகையில் ‘‘அகதிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் மீண்டும் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதுதான் பிரச்சினையை தீர்க்க வழியாக இருக்கும். அதேநேரம், இந்த உத்தரவால் எல்லைகள் வலுவிழந்து போகாது, எல்லைப்பகுதிகள் மிகவும் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும், சட்டவிரோதமாக உள்ளே நுழைபவர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளைப் பிரித்து வேடிக்கை பார்ப்பதில் எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை. அகதிகள் சட்டவிரோதமாக வரும் பிரச்சினை நீண்டஆண்டுகளாக இருக்கிறது உங்களுக்குத் தெரியும். குடியேற்ற விதிகளைத் தீவிரமாக அமல்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை’’ என டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால், அதிபர் டிரம்ப்பின் உத்தரவு முழுமையானது இல்லை, இன்னும் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து ஜனநாயகக் கட்சியின் தலைவர் நான்சி பெலோசி கூறுகையில், ‘‘அகதிகளின் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் சேர்க்கும் உத்தரவை வரவேற்றபோதிலும், குழந்தைகள் காப்பகத்தில் பல்வேறு உரிமை மீறல்களில் சிக்கி இருக்கிறார்கள். குழந்தைகளையும், அகதிகளையும் பாதுகாக்கும் வகையில், மிகவும் மோசமான சிறைகளில் வசிக்கும் அவர்களை முறைப்படுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோய் குரோவ்லி கூறுகையில், ‘‘டிரம்பின் இந்த உத்தரவின் மூலம் அகதிகளின் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவார்கள் இதை வரவேற்கிறோம். பெற்றோர்களைப் பிரிந்து வாரக்கணக்கில் தனிமையில் தவித்த குழந்தைகள், இனி பாசத்துக்காக ஏங்கவிடாமல் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.