சேகுவேரா உடை அணிந்த ராணுவ வீரரை நீக்கிய அமெரிக்கா
ராணுவ வீரர் ஒருவர் சேகுவேரா உடை அணிந்ததற்காகவும், கம்யூனிசம் வெல்லும் என்று தனது ராணுவத் தொப்பியில் எழுதியதற்காகவும் அவரை அந்நாட்டு ராணுவத்திருந்து நீக்கியுள்ளது அமெரிக்கா.
26 வயதான ஸ்பென்சர் ரபோன் அமெரிக்காவின் வெஸ்ட் பாய்ண்ட் ராணுவப் பயிற்சி மையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது பயிற்சியை முடித்திருக்கிறார். அப்போது அவரது பட்டமளிப்பு விழாவில் புரட்சியாளர் சேகுவேரா உருவம் பொறித்த உடையை அணிந்தும், தனது சீருடைக்கு அளிக்கப்பட்ட தொப்பியில் கம்யூனிசம் வெல்லும் என்று எழுதப்பட்ட தொப்பியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து ஸ்பென்சர் ரபோன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் செவ்வாயன்று விசாரணை முடிந்ததாக அறிவித்துள்ள அமெரிக்க அரசு ஸ்பென்சர் ரபோனை ராணுவத்திலிருந்து நீக்கியுள்ளது.
மேலும் இந்த விசாரணை தொடர்பாக கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தான் பணி நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல் அமெரிக்க ராணுவ அலுவலகத்தின் முன் நின்றுகொண்டு கடைசி குட் பை என்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுருக்கிறார் ரபோன்.
இந்த நிலையில் சிகாகோவில் நடைபெறவுள்ள சோசியலிசம் 2018 மாநாட்டில் அவர் உரையாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட ஸ்பென்சர் ரபோனுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆதரவை அளித்துள்ளனர்.