EBM News Tamil
Leading News Portal in Tamil

உலக மசாலா: தானாகப் பொரிந்த குஞ்சுகள்!

ஜப்பானில் உள்ள ‘ஹோமி ஹிரோய் சாமுராய்’ குழு, தெருக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டே குப்பைகளையும் சேகரிக்கிறார்கள். பழங்கால சாமுராய் வீரர்களைப் போல் உடை, தொப்பி, காலணிகளை அணிந்து மிக நேர்த்தியாக நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இன்றைய இளைஞர்களையும் ஈர்க்கக் கூடிய நடனங்கள் என்று தங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு நிகழ்ச்சிகளை வழங்குவதில் வல்லவர்கள். சாமுராய் கலைஞர்களாக இருந்தவர்கள், குப்பைகளை அள்ளும் பணியை மேற்கொள்ள ஆரம்பித்த பிறகு, ஜப்பான் முழுவதும் பிரபலமாகிவிட்டனர்.
“நாங்கள் முதலில் கலை நிகழ்ச்சிகளை மட்டுமே தெருக்களில் நடத்தி வந்தோம். இப்போது சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம். ஜப்பானிய நகரங்களில் குப்பைகள் அதிகம். அதிலும் பண்டிகைக் காலங்களில் குப்பை பல மடங்கு அதிகரித்துவிடும். அப்படிப்பட்ட ஒரு பண்டிகை காலத்தில்தான் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் முடிவை எடுத்தோம். சாமுராய் ஆடைகள், வாளுடன் குப்பை சேகரிக்கும் பெட்டி, குப்பை எடுக்கும் கரண்டி போன்றவற்றையும் வைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்துவோம்.
நிகழ்ச்சியின் நடுவிலேயே குப்பைகளைச் சேகரித்து விடுவோம். இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு சமூகக் கடமை இருப்பதாக நினைக்கிறோம். எங்கள் குழுவின் முக்கிய முழக்கம் மனிதர்களை நேசியுங்கள் என்பதுதான். குப்பை அகற்றுவது மகத்தான பணி என்பதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். பல நகரங்களிலும் எங்களின் குழுக்கள் இயங்கி வருகின்றன” என்கிறார் ஜிடாய்குமி.
கலையுடன் சமூகக் கடமையும் சேரும்போது உன்னதமடைகிறது!
ஜார்ஜியா நாட்டின் மார்மெயுலி என்ற சிறிய நகரத்தின் குப்பைக் கிடங்கில் இருந்து ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வெளிவருவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். “நான் குப்பைக் கிடங்கு வழியே வரும்போது, காகிதங்கள் பறந்து வருவதுபோல் தோன்றியது. அருகில் சென்று பார்த்தபோது இளம் மஞ்சள் வண்ண கோழிக் குஞ்சுகள் கத்திக்கொண்டு தங்கள் தாயைத் தேடி ஓடிக் கொண்டிருந்தன.
பிறகுதான் தெரிந்தது, நகரில் இருக்கும் ஒரு கோழிப் பண்ணை, கெட்டுப்போன முட்டைகளை இங்கே வந்து கொட்டியிருக்கிறது. அவர்கள் கெட்டதாக நினைத்த முட்டைகள் எல்லாம் வெயிலில் தானாகவே பொரிந்து, முட்டை ஓடுகளை உடைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் வெளிவந்துவிட்டன. உடனே இந்த அரிய காட்சியை வீடியோ எடுத்தேன். உள்ளூர் மீடியாக்களுக்கும் தகவல் கொடுத்தேன். இப்போது இந்தச் செய்தி ஜார்ஜியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவிவிட்டது. உள்ளூர் மேயர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.
பண்ணை உரிமையாளர், கெட்டுப்போன முட்டைகள் என்று தாங்கள் தவறாகக் கணித்துவிட்டதால் இந்தச் சம்பவம் நடைபெற்றுவிட்டது. கோழியில் இருந்து கிடைக்கும் வெப்பநிலை உருவானதால் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்துவிட்டன என்று தெரிவித்திருக்கிறார். பொதுமக்கள் இந்தக் குஞ்சுகளைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்” என்கிறார் சாஹித் பயராமோவ்.