EBM News Tamil
Leading News Portal in Tamil

பாகிஸ்தான் அதிபருடன் கை குலுக்கிய மோடி !

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் அதிபர் மம்னுன் ஹுசேனும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர்.
சீனாவின் குயிங்டோ நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் நிறைவில், அதில் கலந்து கொண்ட தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 
சீன அதிபர் ஷி ஜின்பிங் செய்தியாளர்களிடம் பேசி முடித்த பிறகு, பிரதமர் மோடியும், மம்னுன் ஹுசேனும் பரஸ்பரம் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பாகிஸ்தான் அதிபருடன் பேச்சு இல்லை: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், பாகிஸ்தான் அதிபர் ஹுசேனுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
ஆப்கன் அதிபரை பாராட்டிய மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில் பிரதமர் மோடியும், ஹுசேனும் தனித்தனியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 
பிரதமர் மோடி தனது செய்தியாளர் சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பயங்கரவாதம், பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்டதற்கு துரதிருஷ்டவசமான எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தான் திகழ்கிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அதிபர் அஸ்ரப் கனி எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிப்பார்கள் என நம்புகிறேன்.
ஆப்கானிஸ்தான் இறையாண்மை, பாதுகாப்பு, ஜனநாயகம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட கடந்த காலத்தில் காரணமாக இருந்தவை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவருடைய பொறுப்பாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு என்ற முறையில், ஆப்கானிஸ்தானில் இந்தியா முக்கிய பங்காற்றும் என்றார் மோடி.
பாகிஸ்தான் அதிபர் ஹுசேன் செய்தியாளர்களிடம் பேசியபோது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தால், பாகிஸ்தானின் பொருளாதார நிலை மேலும் வலுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 2016ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த 2 சம்பவங்களாலும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
உரித் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, 19ஆவது சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதையடுத்து, வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணித்தன. இதனால், சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டது.

கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் மோடி ஆலோசனை

கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளின் அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கு இடையே, கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸர்பயேவை மோடி சந்தித்தார். அப்போது சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பில் கஜகஸ்தானும் சேர வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார். இதற்கு கஜகஸ்தான் அதிபரும் சாதகமான பதிலை அளித்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளர் (மேற்கு) ருச்சி ஞானஸ்யம் தெரிவித்தார்.

கிர்கிஸ்தான் அதிபர் சுருன்பாய் ஜீன்பேகேவ், மங்கோலிய அதிபர் கால்ட்மாகின் படுல்கா ஆகியோருடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக, உஸ்பெகிஸ்தான் அதிபர், தஜிகிஸ்தான் அதிபர் ஆகியோருடனும் பிரதமர் மோடி சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.