EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியா, பாகிஸ்தான் இணைந்ததால் ஷாங்காய் அமைப்பின் பலம் அதிகரிப்பு: சீன அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியாவும், பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பு நாடுகளாக இணைந்துள்ளதால் அந்த அமைப்பின் பலம் அதிகரித்துள்ளது என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.
சீனாவின் குயின்டோ நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-ஆவது மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை தொடக்க உரையாற்றிய அவர் இது தொடர்பாக பேசியதாவது:
ஷாங்காய் அமைப்பின் புதிய உறுப்பு நாடுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டு இணைந்தன. 
இந்த மாநாட்டில் முதல்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் அதிபர் மம்னுன் ஹுசைனும் பங்கேற்றுள்ளனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இதன் மூலம் ஷாங்காய் அமைப்பும் பலம் பெற்றுள்ளது.
நாம் நமக்குள் உள்ள பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒற்றுமையும், நல்லிணக்கமும் அதிகரிக்கும்போதுதான் நல்ல பயன்கள் கிடைக்கும். பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்போது, அனைத்து நாடுகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றார்.
பின்னர் மாநாட்டு நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷி ஜின்பிங், "உலகமயமாகி வரும் பொருளாதாரம், பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை குறித்து முக்கியமாக விவாதித்தோம். 
பரஸ்பரம் நன்மை, பிராந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, முதலீடு, வர்த்தகம், தகவல்தொடர்பை அதிகரிப்பது ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட அனைத்து நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. 
பரஸ்பரம் ஒருவரை மற்றொருவர் மதித்து நடப்பது, உறுப்பு நாடுகளிடையே சமத்துவத்தைப் பேணுவது, அனைவரும் ஒருங்கிணைந்து வளர்ச்சியை எட்டுவது என்று உறுதி ஏற்கப்பட்டது' என்று தெரிவித்தார்.