EBM News Tamil
Leading News Portal in Tamil

அவசர நிலை பிரகடனப்படுத்தியதால் தேச துரோக வழக்கு: முஷாரப் பாஸ்போர்ட்டை முடக்குகிறது பாக்.

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை முடக்குவதற்கு உள்துறை அமைச்சகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
முஷாரப் பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007 நவம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு கடந்த 2014-ல் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேசதுரோக வழக்கில் அவர் ஆஜராகாததை தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் முஷாரப் வெளிநாடு செல்ல முடியாது. வங்கிப் பரிவர்த்தனைகள் செய்ய முடியாது. மேலும் பாகிஸ்தானிலோ அல்லது வெளிநாட்டிலோ சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. முஷாரப் 1999 – 2008 வரை பாகிஸ்தானை ஆட்சி செய்தார். அவர் மீது தேச துரோக வழக்கு தவிர, முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. தேச துரோக வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. – பிடிஐ