லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம் | Destructive California Wildfires Burn Across LA
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இந்த பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களது சொந்த வீடுகளை இழந்துள்ளனர்.
பசிபிக் பலிசடேஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்தான் காட்டுத் தீ முதன்முதலில் ஏற்பட்டுள்ளது. பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு காற்றின் வேகத்தால் இந்த காட்டுத்தீ மளமளவென பரவியுள்ளது. குறிப்பாக, பலிசடேஸ், சைல்மர், ஹாலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். 24 மணி நேர உதவி மையங்களும் இதற்காக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.