கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்ததால் பைடன் அரசுக்கு குடியரசு கட்சி கண்டனம் | US Congressman questions Biden admin on Gautam Adani probe
கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்தது இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது நிறுவன உயர் அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை கடந்த ஆண்டு நவம்பர் 20-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. அதில், இந்தியாவில் சோலார் மின்சக்தி திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் வழங்கியதாகவும், இதை மறைத்து அமெரிக்கர்களிடமிருந்து முதலீடு திரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அதானி குழுமம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் குடியரசு கட்சி கட்சி எம்.பி.யும் நாடாளுமன்ற நீதிக் குழு உறுப்பினருமான லான்ஸ் கூடன் அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் மெரிக் பி.கார்லேண்டுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதித் துறை வழக்கு பதிவு செய்திருப்பது ஒருதலைபட்சமான நடவடிக்கை. இந்த செயல்பாடு, ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான நட்பு நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தியா போன்ற நாடுகளுடனான நட்புறவை சேதப்படுத்தும் வகையில் உள்ளது.
பலவீனமான அதிகார வரம்புடன், அமெரிக்காவின் நலனுக்கு தொடர்பு இல்லாத விவகாரத்தில் வழக்குகள் பதிவு செய்வதற்கு பதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் பரவும் வதந்திகளை துரத்துவதைவிட, உள்நாட்டில் மோசமான செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதில் நீதித்துறை கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.