EBM News Tamil
Leading News Portal in Tamil

‘கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை’ – ட்ரம்புக்கு ட்ரூடோ பதிலடி | no chance that Canada would become part of US Trudeau to Trump


புளோரிடா: கனடா அமெரிக்க தேசத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணையலாம் என ட்ரூடோ பதவி விலகிய நிலையில் அமெரிக்க நாட்டின் அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு ட்ரூடோ பதிலடி கொடுத்துள்ளார்.

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க பொருளாதார ரீதியான அழுத்தம் தரப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் ராணுவத்தை பயன்படுத்த போவதில்லை என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ட்ரூடோவை ஆளுநர் என்றும், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்தும் கடந்த சில வாரங்களாக அவர் தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

“நிச்சயம் கனடாவை இணைக்க பொருளாதார அழுத்தம் கொடுக்கப்படும். அந்த எல்லை பகுதியை பாருங்கள் அது செயற்கையாக வரையப்பட்டது. அதோடு இந்த நகர்வு தேசத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். அமெரிக்கா தான் கனடாவை பாதுகாக்கிறது என்பதை மறக்க வேண்டாம். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கில் செலவிட்டு வருகிறோம். அதனால் தான் ட்ரூடோவை ஆளுநர் என அழைக்கிறேன். அவர்களிடமிருந்து எங்களுக்கு எதுவும் வேண்டாம். எனது உத்தரவு மூலம் சிலரது தடைகளை நீக்க முடியும்.

அண்டை நாடு என்பதால் நாம் சிலவற்றை செய்து வருகிறோம். இது பழக்கத்தின் அடிப்படையினால் ஆனது. கனடா நமது மாகாணம் என்றால் அதை செய்ய நான் தயாராக உள்ளேன். அதுவே நாடு என வரும் போது இனியும் முடியாது. இந்த கேள்விகளுக்கு ட்ரூடோவிடம் பதில் இல்லை. நான் கனடா மக்களை நேசிக்கிறேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரூடோ பதிலடி: “கனடா அமெரிக்காவின் பகுதியாக மாறும் வாய்ப்பு இல்லை. சமூகம் மற்றும் தொழிலாளர்கள் என இரு நாட்டு தரப்பிலும் ஒருவருக்கொருவர் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு சார்ந்து கூட்டாளிகளாக இருப்பதன் மூலம் பலன் அடைந்து வருகின்றனர்” என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.