EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரம்மபுத்திரா அணைத் திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது: சீனா தகவல் | China says its world’s biggest dam over Brahmaputra will not impact water flows to India


பெய்ஜிங்: பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக புதிய செய்தித் தொடர்பாளர் குவா ஜியாகுன், “யார்லுங் சாங்போ(பிரம்மபுத்திரா) ஆற்றின் கீழ் பகுதியில் நீர்மின் திட்ட விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. கடுமையான அறிவியல் மதிப்பீட்டுக்குப் பின்னரே இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல், புவியியல் நிலைமைகள் மற்றும் கீழ்நிலை நாடுகளின் நீர் வளங்கள் தொடர்பான உரிமைகள் மற்றும் நலன்களில் இந்தத் திட்டம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறேன். மாறாக, இது ஓரளவுக்கு, அவர்களின் பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்பு, காலநிலை எதிர்வினை ஆகியவற்றுக்கு உதவும்” என்று தெரிவித்தார்.

இந்திய எல்லைக்கு அருகில் திபெத்தில் உள்ள யர்லுங் சாங்போ ஆற்றின் மீது அணை கட்ட சீன அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. ரூ.137 பில்லியன் மதிப்பில் இந்த அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வங்கதேசம் அருகில் இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தாக்கில் கட்டப்பட உள்ளது. ஜனவரி 3 அன்று முன்மொழியப்பட்ட இந்த திட்டம் குறித்து எதிர்வினையாற்றிய இந்திய அரசு, இந்த திட்டத்தால் பிரம்மபுத்திராவின் கீழ்நிலை பகுதியில் உள்ள நாடுகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு சீனாவை வலியுறுத்தியது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நமது நலன்களைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். பிரம்மபுத்திரா ஆற்றில் உரிமைகளைக் கொண்ட அதன் தாழ்வான பகுதியில் உள்ள ஒரு நாடு என்ற முறையில், நாங்கள் தொடர்ந்து சீனத் தரப்புக்கு எங்கள் கருத்துகள் மற்றும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளோம். சீனாவின் சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து, கீழ்நிலை நாடுகளுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.