217 டிசைனர் கைப்பைகள், 75 ஆடம்பர வாட்சுகள்: தாய்லாந்து பிரதமரின் சொத்து மதிப்பு ரூ.3,430 கோடி | Thai PM declares millions in watches and bags among 400m assets
தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு 13.8 பில்லியன் பாட் (அமெரிக்க டாலரில் 400 மில்லியன்-இந்திய மதிப்பில் ரூ.3,430 கோடி) சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் கரன்சியில் 1 பாட் என்பது இந்திய மதிப்பில் ரூ. 2.48 ஆகும்.
தாய்லாந்தின் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (என்ஏசிசி) அந்நாட்டு பிரதமர் தனது சொத்து பட்டியலை தாக்கல் செய்துள்ளார். இதனை அவரது பியூ தாய் கட்சி உறுதி செய்துள்ளது. அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளதாவது:
தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு 13.8 பில்லியன் பாட் மதிப்பிலான சொத்துகள் உள்ளன அதில், 11 பில்லியன் பாட் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் பாட்டை அவர் ரொக்கம் மற்றும் டெபாசிட்டாக வைத்துள்ளார்.
மேலும், 75 ஆடம்பர வாட்சுகளின் மதிப்பு 162 மில்லியன் பாட். 217 டிசைனர் ஹேண்ட்பேக்குகளின் மதிப்பு 76 மில்லியன் பாட். இவைதவிர, லண்டன் மற்றும் ஜப்பானில் அவருக்கு சொத்துகள் உள்ளன.
பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு 5 பில்லியன் பாட் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது நிகர சொத்து மதிப்பு 8.9 பில்லயன் பாட் ஆகும். இது, இந்திய மதிப்பில் ரூ.2,212 கோடியும், அமெரிக்க மதிப்பில் 258 மில்லியன் டாலரும் ஆகும்..இவ்வாறு அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் தற்போதைய பிரதமர் பேடோங்டர்ன், முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள் ஆவார். இவர், கடந்த செப்டம்பரில் தாய்லாந்து பிரதமராக பொறுப்பேற்றார். தாய்லாந்தை இவரது குடும்பம் தான் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. அந்த வகையில், தாய்லாந்தை ஆளும் அந்த குடும்பத்தின் நான்காவது வாரிசுதான் பேடோங்டர்ன்.