EBM News Tamil
Leading News Portal in Tamil

2024-ல் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு: ஆய்வறிக்கையில் தகவல் | 2000 people lost their lives in 10 disasters in 2024


2024-ம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்ட் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாற்றங்களால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. பேரழிவுகள் காரணமாக ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார தாக்கம், மனித உயிரிழப்புகள் குறித்த தகவல்களை கிறிஸ்டியன் எய்ட் அமைப்பு சேகரித்து வருகிறது.

2024-ம் ஆண்டில் மிகப்பெரிய பேரழிவுகள் ஏற்படவில்லை என்றாலும், வட அமெரிக்காவில் 4, ஐரோப்பிய நாடுகளில் 3 பேரழிவுச் சம்பவங்கள் நடந்தன. மீதமுள்ள 3 பேரழிவுச் சம்பவங்கள் சீனா, பிரேசில், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டன.

இந்த சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 288 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த மதிப்பீடுகளில் பெரும்பாலானவை காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அதேநேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரியவந்தாலும், உயிரிழந்த மக்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்டியன் எய்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவுச் சம்பவம் இடம்பெறவில்லை. கடந்த ஜூலையில் நடந்த இந்த பேரழிவுச் சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

2024-ல் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய பேரழிவாக, கிறிஸ்டியன் எய்ட் அறிக்கையில் கடந்த அக்டோபரில் ஏற்பட்ட சூறாவளி சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பும் ஏற்பட்டது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, கியூபா, மெக்சிகோ நாடுகளைத் தாக்கிய ஹெலன் சூறாவளி சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 232 பேர் உயிரிழந்தனர். மேலும் 55 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.