EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆப்கனில் வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை! | Taliban bans windows in areas overlook Afghan women


காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கு தடை விதித்துள்ளது தலிபான் அரசு. அதன்படி புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் கட்டக்கூடாது. மேலும், தற்போது உள்ள ஜன்னல்களை அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது அவர்களே சொல்லி இருந்தனர்.

பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே அவர்களது செயல்பாடு இதுவரை இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு தலிபான் அரசு தரப்பில் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், “பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதைப் பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது குற்றச் செயலாகும். அதனால் நாட்டில் புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, அண்டை வீட்டாரின் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக் கூடாது.

ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை சுவர் எழுப்பியோ அல்லது அதை பார்க்க முடியாத வகையில் தடை செய்யவோ வேண்டும். இதனை வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் அண்டை வீட்டாருக்கு ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்கலாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பெண் பிள்ளைகளுக்கான கல்வி, வேலை, பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவை மறுக்கப்பட்ட நிலையில் தற்போது வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.