தென்கொரிய விமான விபத்து: விரிவான ஆய்வுக்கு இடைக்கால அதிபர் உத்தரவு | South Korea’s acting leader orders inspection of airline systems
சியோல்: தென்கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்த நிலையில், நாட்டின் விமான போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு தரத்தை முழு வீச்சுல் ஆய்வு செய்யும்படி தற்காலிக அதிபர் சோய் சாங் மாக் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குள்ளான ஜேஜு விமானத்தினை மீட்கும் பணி முழுமையாக நிறைவு பெற்ற பின்னர், இந்த ஆய்வினை தொடங்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார். விமானங்களின் தரம், விமான போக்குவரத்து மேலாண்மை, விமான நிலைய ஓடுபாதைகளின் நிலை என அனைத்தையும் உள்ளடக்கி விரிவான ஆய்வுக்கு காபந்து அதிபர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, தென் கொரிய விமான விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.ஆஸ்திரேலியாவின் ஏர்லைன்ஸ் நியூஸ் சமூக ஊடக ஆசிரியர் ஜெப்ரே தாமஸ் கூறும்போது, “பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் நுரை தெளித்திருக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே விபத்துக்கு காரணம்” என்றார். “பறவை மோதி சக்கரம் செயலிழந்ததாக கேள்விப்பட்டதே இல்லை” என்று ஜெப்ரே டெல் என்ற நிபுணர் கூறினார். “தரையிறங்கியதும் விமானத்தின் வேகத்தை குறைக்காதது தவறு” என்று டெரவர் ஜென்சன் என்ற வல்லுநர் தெரிவித்தார். இந்நிலையில் தான் பாதுகாப்பு தொடர்பாக விரிவான ஆய்வுக்கு தென்கொரிய இடைக்கால அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்தது என்ன? முன்னதாக, தென்கொரியாவின் முவான் நகரில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள், விமானிகள் உட்பட 179 பேர் உயிரிழந்தனர். விமானம் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. அதன் பின்பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
ஓடுபாதையில் விமானத்தின் அடிப்பகுதி உரசியபடி சென்ற நிலையில், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் பலத்த வேகத்தில் சுற்றுச்சுவரில் மோதியது. இதில் விமானம் தீப்பிடித்து முழுமையாக எரிந்தது. இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் பின் பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமான விபத்தாகக் கருதப்படும் இந்த விபத்தையடுத்து 7 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.