EBM News Tamil
Leading News Portal in Tamil

சீன ஆய்வகத்தில் இருந்து கரோனா பரவியதற்கான ஆதாரத்தை அதிபர் பைடன் நிறுத்தி வைத்தார்: அமெரிக்க பத்திரிகையில் தகவல் | President Biden withheld evidence that covid19 spread from Chinese lab


நியூயார்க்: கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவிலிருந்து கரோனா வைரஸ் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இதன் பாதிப்பு இருந்தது.

இந்நிலையில் சீனாவின் வூகான் நகரிலுள்ள ஆய்வகச் சோதனையின்போது கரோனா வைரஸ் கசிந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்று அப்போது செய்திகள் வந்தன. ஆனால், இதை சீனா மறுத்தது.

இந்நிலையில் சீனாவிலுள் ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்காவின் எப்பிஐ போலீஸார் வைத்திருந்ததாகவும், ஆனால் அப்போதைய அதிபர் ஜோ பைடன் அதை தடுத்து நிறுத்தி வைத்ததாகவும் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: எப்பிஐ-யை சேர்ந்த மூத்த முன்னாள் விஞ்ஞானியும், மைக்ரோபயலாஜி டாக்டருமான ஜேசன் பன்னன் கூறும்போது, “சீனாவிலுள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் கசிந்தது. இதற்கான ஆதாரம் எப்பிஐ-யிடம் உள்ளது. இதற்கு சீனாதான் முழு காரணம் என்பதற்கான ஆதாரத்தை வைத்திருந்த ஒரே போலீஸ் அமைப்பு எப்பிஐ மட்டும்தான்.

அந்தத் தகவல் அப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதிபர் ஜோ பைடன் அதை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. எனவே, அந்த உண்மையை வெளியிடுவதற்கு எப்பிஐ-க்கு அனுமதியை அதிபர் பைடன் தரவில்லை” என்றார். இவ்வாறு அந்த பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.