EBM News Tamil
Leading News Portal in Tamil

ட்ரம்ப் ஆட்சியில் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை | Russia warns United States on possible nuclear testing under Donald Trump


மாஸ்கோ: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில், ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக அந்நாடு எச்சரித்துள்ளது.

1990-ல் சோவியத் யூனியன் அணு ஆயுத சோதனையை நடத்தியது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யா அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை. இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் காலத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனையை நடத்த வாய்ப்பு உள்ளதாக ரஷ்யாவின் ஆயுத கட்டுப்பாட்டு மையத்தை மேற்பார்வையிடும் அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியதாக கொம்மர்சன்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது

“டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்துக்கு எதிராக (CTBT) தீவிர நிலைப்பாட்டை எடுத்தார். தற்போது மீண்டும் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.

தற்போது சர்வதேச சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. பல்வேறு அம்சங்களில் அமெரிக்காவின் கொள்கை எங்களுக்கு மிகவும் விரோதமாக உள்ளது. எனவே, பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கு எங்கள் முன் உள்ள வாய்ப்புகளில் இதுவும் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். அணுசக்தி சோதனையில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மாஸ்கோ பரிசீலித்து வருகிறது. அரசியல் ரீதியாக பொருத்தமான சமிக்ஞைகள் அனுப்பப்படும். அதேநேரத்தில், விதிவிலக்குகள் என்று எதுவும் இல்லை.” என்று செர்ஜி ரியாப்கோவ் கூறியதாக கொம்மர்சன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

2017-2021 வரையிலான டொனால்ட் ட்ரம்பின் முதல் பதவிக் காலத்தில், அணு ஆயுதச் சோதனையை நடத்தலாமா வேண்டாமா என்று அவரது நிர்வாகம் விவாதித்ததாக வாஷிங்டன் போஸ்ட் 2020-ல் தெரிவித்தது. 1992-க்குப் பிறகு அமெரிக்கா அணு ஆயுத சோதனையை நடத்தாத நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தினால் ரஷ்யாவும் அணுஆயுத சோதனையை நடத்துவது குறித்து பரிசீலிக்கும் என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து ஒரு சில நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களை சோதனை செய்துள்ளதாக ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கம் (Arms Control Association) தெரிவித்துள்ளது. சீனா மற்றும் பிரான்ஸ் 1996ம் ஆண்டிலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் 1998ம் ஆண்டிலும், வட கொரியா 2017ம் ஆண்டிலும் சோதனை செய்ததாக ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.