EBM News Tamil
Leading News Portal in Tamil

72 பயணிகளுடன் சென்ற விமானம் கஜகஸ்தானில் தரை இறங்கியபோது விபத்து | Russia-bound Azerbaijan Airlines plane crashes near Kazakhstan’s Aktau


அக்டாவ்: கஜகஸ்தானின் அக்டாவ் விமானநிலைத்தில் 72 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்க முயன்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் 12 பேர் உயிர் பிழைத்திருப்பதாகவும் கூறினர்.

ரஷ்ய செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம் ஜெ2-8243 பாகுவில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் கஜகஸ்தானின் அகடாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.

விமானம் விபத்துக்குள்ளான போது, அதில், ஐந்து விமான சிப்பந்திகளுடன் 67 பயணிகள் இருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று கஜகஸ்தான் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்துகுறித்து வெளியான வீடியோவில் விமானம் விபத்துக்குள்ளானபோது, வேகமாக உயரமிழந்து மோதி தீப்பிழம்புகளுடன் விபத்துக்குள்ளாவது பதிவாகியுள்ளது. அதிக புகை மூட்டம் காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விமானம் திறந்த வெளியில் விழுந்து விபத்துக்குளாகியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் அவசர சேவைகள் பிரிவு தீயை அணைத்தது. விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக கஜகஸ்தான் அவசரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஜர்பைஜான் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் எம்பரர் 190 விமானம், பாகு – க்ரோனி வழித்தடத்தில் அக்டாவ் நகருக்கு அருகே மூன்று கிலோ மீட்டருக்கு முன்பு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு போன்ற எந்த காரணத்தால் விமானம் விபத்துக்குள்ளானது என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.