EBM News Tamil
Leading News Portal in Tamil

துருக்கி வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் | 12 killed in blast at explosives factory in Turkey


துருக்கியில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் பாலிகேசிர் மாகாணத்தில் கரேசி நகர் அமைந்துள்ளது. அங்கு வெடிமருந்து உற்பத்தி ஆலை செயல்படுகிறது. அந்த ஆலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ஆலையில் பணியாற்றிய 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இதுகுறித்து துருக்கி காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கரேசி நகரில் செயல்படும் இசட்எஸ்ஆர் என்ற வெடிமருந்து உற்பத்தி ஆலையில் துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயார் செய்யப்படும் துப்பாக்கி குண்டுகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எதிர்பாராத விதமாக இசட்எஸ்ஆர் ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

துருக்கியின் பல்வேறு நகரங்களில் குர்து தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன. கரேசி நகர் வெடிவிபத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மனித தவறு காரணமாக வெடிவிபத்து நேரிட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இவ்வாறு துருக்கி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரில் பார்த்த சாட்சிகள் கூறும்போது, “வெடிவிபத்து நேரிட்ட ஆலைப் பகுதி போர்க்களமாக காட்சியளிக்கிறது. ஆலையின் கட்டிடங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. வெடி விபத்து ஏற்பட்ட பகுதியை செய்தியாளர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.