EBM News Tamil
Leading News Portal in Tamil

போதைப் பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக் கொலை | International drug smuggler Sunil Yadav gunned down in California


போதைப் பொருள் கடத்தல்காரர் என்று அறியப்படும் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்தவர் தாதா லாரன்ஸ் பிஷ்னோய். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12-ம் தேதி மகாராஷ்டிர மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக லாரன்ஸ் ஏற்கெனவே அறிவித்த விவகாரமும் தற்போது கிளம்பியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள லாரன்ஸ் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தி வந்த சுனில் யாதவ் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி ரோஹித் கோடாரா பொறுப்பேற்றுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் யாதவ், பஞ்சாப் மாநிலம் பஜில்கா மாவட்டம் அபோகர் பகுதியைச் சேர்ந்தவர். இவரும் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்தான். ராஜஸ்தானில் இவர் மீது கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது தனித்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில்தான் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டாக்டன் நகரில் சுனில் யாதவ் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பு சுனில் யாதவ், துபாயில் வசித்து வந்தார். இந்நிலையில் சுனில் யாதவை கொலை செய்தவர்கள் குறித்து கலிபோர்னியா போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொலை செய்த இடத்தில் பிஷ்னோயின் கூட்டாளி ரோஹித் கோடாரா தகவலை விட்டுச் சென்றுள்ளார்.

அதில் ரோஹித் கோடா கூறும்போது, “பழிக்குப் பழி வாங்கும்விதமாக சுனில் யாதவை நான் கொலை செய்தேன். என்னுடைய நண்பர் அங்கித் பாதுவை சுனில் யாதவ் கொன்றார். அதற்கு பழிவாங்கவே தற்போது கொலை செய்தேன்.

அமெரிக்காவுக்குச் சென்ற பின்னரும் என்னைப் பற்றியும், என் சகோதரர்கள் பற்றியும் தகவல்களை சுனில் யாதவ் பரப்பி வந்தார்” என்றார்.